தமிழ்நாடு: வேலூர் மாவட்டம் தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் (TETO-JAC) பேரமைப்பின் சார்பாக அரசாணை 243ஐ ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
நடைபெற்ற போராட்டத்தில் லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் வழிவகை செய்யக்கூடிய அரசாணை 243ஐ உடனடியாக ரத்து செய்து அறுபது ஆண்டு கால நடைமுறையில் இருந்த ஒன்றிய அளவிலான முன்னுரிமை பேணப்பட வேண்டும். பதவி உயர்வாக இருந்தாலும், பணியிட மாறுதலாக இருந்தாலும் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை முழக்கம் வைக்கப்பட்டது.
இந்த அரசாணையான 243ஐ உடனடியாக ரத்து செய்து பழைய நடைமுறையில் பணி மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு அனைத்தும் நடைமுறைப்படுத்த வேண்டும் என வேலூர் ரவுண்டானா பகுதியில் உள்ள தொன் போஸ்கோ உயர்நிலை பள்ளியில் உள்ளிருப்பு போராட்டம் ஈடுபட்டு கலந்தாய்வு அறையை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் கண்டன கோஷம்: போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசாணை எண் 243 ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியைகள் ஈடுபட்டனர்.
அரசானை 243ன்படி கலந்தாய்வு நடைபெறும் பொழுது எங்கிருந்து யாரை வேண்டுமானாலும் பணியிடை மாற்றம் செய்யலாம் என்று அரசானையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது 95% ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கலந்தாய்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே பல இடங்களில் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த அரசாணையை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்12 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
திருவாரூர்: அரசாணை 243 திரும்ப பெற வேண்டி திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து டிட்டோ ஜாக் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு இதுவரை இருந்து வந்த ஒன்றிய அளவிலான முன்னுரிமை என்ற நிலையை மாற்றி மாநில அளவிலான முன்னுரிமை என்பதற்கான அரசாணை எண் 243 ஐ ரத்து செய்ய வேண்டும்.
மாணவர்களின் கல்விநலன் கருதி அவர்களுக்கான கற்பித்தல் பணிகளை மட்டுமே ஆசிரியர்கள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் டிட்டோஜாக் அமைப்பினர் திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.