தென்காசி: கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியில் கடந்த ஜூலை 30ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவால் வீடு, உடமைகளை இழந்து பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாதரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை தங்களால் முடிந்த தொகையை நிவாரணமாக வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு உதவி பெறும் தாருஸ்ஸலாம் துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் சேமித்து வைத்த உண்டியல் பணத்தை கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு பேரிழப்பு நிதியாக வழங்கியுள்ளனர்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் ஏராளமான மக்கள் தங்களது சொத்துக்கள், சொந்தங்களை இழந்தும் தவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பேரிழப்புக்கு உதவும் நோக்கில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு உதவி பெறும் தாருஸ்ஸலாம் துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் சேமித்து வைத்த ரூபாய் 20 ஆயிரம் உண்டியல் பணத்தை கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு பேரிழப்பு நிதியாக பள்ளி மாணவர்கள் வழங்கியுள்ளனர்.
மாணவர்களின் சேமிப்பு பணத்தை பள்ளி நிர்வாகம் காசோலையாக மாற்றி இன்று பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோரை நேரில் சந்தித்து வழங்கினார். அப்பொழுது பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அப்துல் பாரி ஆசிரியை ஆயிஷா, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜபருல்லா, உடற்கல்வி ஆசிரியர் பக்கீர் முகமது ஆகியோர் உடன் இருந்தனர்.
இதே போல, தேனி மாவட்டம் கம்பம் பகுதி சிஐடியூ ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் தங்களது ஒருநாள் சவாரி பணத்தை நிவாரண நிதியாக அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். மேலும், நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் தங்களது சேமிப்பு பணத்தை நிவாரண தொகையாக வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்