திருநெல்வேலி: நாடு முழுவதும் நாளை (மார்ச்.08) மகளிர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. சக மனிதராக பிறந்தாலும் சமுதாயத்தில் பெண்கள் எப்போதுமே தனி பார்வையோடு பார்க்கப்படுகின்றனர். குறிப்பாக அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு என்ற வரிகளுக்கு ஏற்ப முன்பொரு காலத்தில் பெண்கள் வீட்டிற்குள் அடிமையாக வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கு கல்வி, வேலை போன்ற வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. தொடர்ந்து புரட்சி கவிஞர் பாரதியார் பெண்கள் புரட்சிக்காக தனது வரிகள் மூலம் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு தலைவர்களின் பங்களிப்பால் பெண்கள் தற்போது வீட்டை விட்டு வெளியேறி விண்ணில் பறக்கும் அளவிற்கு பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர்.
சமீபத்தில் சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குனராக தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜி சுல்தானா என்ற பெண் பங்கு பெற்றார். இதுபோன்று தடைகளை தாண்டி சாதனை செய்யும் பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாகவே ஆண்டுதோறும் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அரசு துறைகள் மற்றும் பிற தனியார் துறைகளில் சாதிப்பது மட்டுமே பெண்களின் சாதனையாக பார்க்கப்படுவதில்லை. ஒரு குடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்துவது தான் பெண்களின் முதல் கடமையாகவும் முதல் சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மாற்றுத்திறனாளி கணவருக்காக ஆட்டோ ஓட்டுனராக மாறி தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். அதாவது தென்காசி மாவட்டம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் மர்ஜான். இவரது செய்யது சுல்தானுக்கு இளம் வயதில் இருந்தே வாதத்தால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியாக இருந்துள்ளார்.
செய்யது சுல்தான் மாற்றுத்திறனாளி என தெரிந்தும் அவருக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மர்ஜான் அவரை திருமணம் செய்ய சம்மதித்துள்ளார். இருவரும் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தி வந்த நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கினர். இதில் செய்து சுல்தானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் முற்றிலும் நடக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். மேலும் அந்த சமயத்தில் மருத்துவமனை சென்று வருவதற்காக மர்ஜான் ஆட்டோவை சவாரிக்கு அழைத்தபோது செய்து சுல்தானின் உடல் நிலையை உணர்ந்து பலர் அவரை வண்டியில் ஏற்ற மறுத்துள்ளனர். இதனால் பெரிதும் மனமுடைந்த மர்ஜான் தானே சொந்தமாக ஆட்டோ வாங்கி, தனது கணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என எண்ணியுள்ளார்.
இதற்காக தனது உறவினர் ஒருவருடன் ஆட்டோ ஓட்ட கற்றுள்ளார். பின்னர் கடன் வாங்கி ஆட்டோ வாங்கிய மர்ஜான் தனது சொந்த ஆட்டோவில் யார் துணையும் இல்லாமல் கணவரை மருத்துவமனை அழைத்து சென்று வந்துள்ளார். நாளடைவில் முழு நேர ஆட்டோ ஓட்டுனராக மாறிய மர்ஜான், தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுனர் என்ற பெருமையும் பெற்றார்.
கணவரின் மருத்துவ தேவைக்காக வாங்கப்பட்ட ஆட்டோ மர்ஜான் வாழ்வாதாரத்திற்கும் பெரும் உதவியாக இருந்துள்ளது. எனவே கடந்த 8 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி தனது மாற்றுத்திறனாளி கணவரை கவனிப்பதோடு தனது இரண்டு பெண் குழந்தைகளின் கல்வி செலவையும் கவனித்து வருகிறார்.
இது குறித்து மர்ஜான் நேரில் சந்தித்து பேசினோம். அப்போது, "நான் எந்த ஓட்டுநர்களையும் குறை கூறவில்லை. இருப்பினும் எனது கணவர் விபத்தில் சிக்கிய போது மருத்துவமனைக்கு சென்று வர சில ஆட்டோ ஓட்டுநர்கள் தயங்கினர். அதன் காரணமாக எனக்கு ஆட்டோ ஓட்டும் பணியில் ஆர்வம் ஏற்பட்டது. நானே ஆட்டோ வாங்கி அதை ஒட்ட கற்றுக் கொண்டு எனது கணவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்தேன்.
தற்போது சவாரிக்கும் சென்று வருகிறேன். இதனால் எனது குடும்பத்தை நடத்த முடிகிறது. அடுத்த கட்டமாக பேருந்து ஓட்ட வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். நேரம் கிடைக்கும் போது எனது மகளுக்கும் ஆட்டோ ஓட்ட கற்றுக் கொடுத்து வருகிறேன். விவசாய வேலை செய்யும் வயதான பாட்டிகளிடம் நான் கட்டணம் வாங்குவதில்லை.
அவர்களை இலவசமாகவே அழைத்து செல்வேன். என்னைப் போன்று பெண்கள் மன தைரியத்தோடு சாதனை புரிய வேண்டும். எந்த துறையாக இருந்தாலும் அதில் தயக்கம் இல்லாமல் பெண்கள் சாதிக்க வேண்டும். அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்தார்.
இது குறித்து செய்யது சுல்தான் நம்மிடம் கூறும்போது, "எனது மனைவி எனக்கு பெரிதும் உதவியாக இருக்கிறார். நான் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் மன உளைச்சல் ஏற்படும் என்பதால் சவாரிக்கு செல்லும்போது என் மனைவி என்னையும் அழைத்துச் செல்வார். அதன் மூலம் என் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்" என்று தெரிவித்தார்.
இப்படி பெண்கள் பல துறைகளில் சாதித்து வரும் சூழலில் தென்காசியின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுனர் தனது மாற்று திறனாளி கணவருக்காக ஆட்டோ ஓட்டுநராக உருவெடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: திமுக விருப்பமனு தாக்கல் நிறைவு.. இவ்வளவு பேர் போட்டியிட விருப்பமா?