தென்காசி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் மார்ச் 27ஆம் தேதியாகும். மனுத் தாக்கலுக்கு நாளை ஒரு நாள் மட்டும் உள்ளதால், முக்கிய கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் நேற்று முதலே வேட்பு மனுவைத் தாக்கல் செய்யத் தொடங்கினர். அதன்படி, பாஜக, அதிமுக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், தென்காசி தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் ராணி ஸ்ரீகுமார், மேளதாளங்கள் முழங்க தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து, 100க்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கமல் கிஷோரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் கூறுகையில்," முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் அனைவரும் எழுச்சியாக உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தென்காசி மக்களின் ஆதரவு எனக்கு பெரும் ஆதரவாக உள்ளது. 40 தொகுதிகளும் திமுக வெற்றி பெறும். 40 தொகுதியும் நமதே, நாடும் நமதே” என்றார்.
வேட்பு மனுத் தாக்கலின் பொழுது அவருடன் திமுக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், திமுக மாவட்டச் செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, தென்காசி, கடையநல்லூர் அருகே புளியங்குடி பகுதிக்கு, தென்காசி நாடாளுமன்ற அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி வருகை தந்துள்ளார். அவருக்கு, புளியங்குடி முன்னாள் அதிமுக நகரச் செயலாளர் சங்கர பாண்டியன் தலைமையிலான அதிமுகவினர் மற்றும் எஸ்டிபிஐ, தேமுதிக, புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
இதில், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர். தென்காசி தொகுதி தமமுக வேட்பாளராக ஜான் பாண்டியன், புதிய தமிழகம் சார்பில் கிருஷ்ணசாமி மற்றும் நாதக சார்பில் இசை மதிவாணன் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி; வேட்பு மனுத் தாக்கல் செய்தார் கனிமொழி! - Dmk Kanimozhi Filing Nomination