சென்னை: தமிழ்நாட்டில் மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வழங்கி வருகிறது. ஆனால், மின்சாரத்தை மின்கடத்திகள் வழியாக கொண்டு சென்று விநியோகம் செய்யும் பணிகளை தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் செயல்படுத்தி வருகிறது.
துணை மின்நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைப்பு: தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மின்சார பரிமாற்றுத் துறையாக விளங்கி வருகிறது. இதற்காக 110 கேவி, 230 கேவி, 400 கேவி, 765 கேவி திறன் கொண்ட துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை மின்சார வாரியத்தின் பணியாளர்கள் பராமரித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின் போது துணை மின்நிலையங்களை தனியார் மூலம் பராமரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மின்சார வாரியம் : துணை மின் நிலையங்களையும் தனியார் பராமரிப்பதற்கு அளிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, துணை மின் நிலையங்களை தனியார் பராமரிப்பதற்கு அளிக்கப்பட்ட உத்தரவுகளை தமிழ்நாடு மின்சார வாரியம் 2020-இல் ரத்து செய்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு மின் தாெடரமைப்பு கழகத்தில் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெற்ற வாரியக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, துணை மின்நிலையங்களை பராமரிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட செயற்பொறியாளர், உதவிச் செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர் பணியிடங்களைக் குறைத்து, பராமரிப்பு மற்றும் மேற்பார்வையிடும் துணை மின் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின்தொடர் கட்டமைப்பின் பணி நியமன தலைமை பொறியாளர் மொழியரசி, கடந்த மார்ச் 5ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம், பணிச்சுமை இல்லாத பகுதிகளில் பணியாளர் அமைப்பை மறுபரிசீலனை செய்ய ஒரு குழுவை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, 110 kV, 230 kV, 400 kV மற்றும் 765 kV-இன் பல்வேறு துணை மின் நிலையங்களுக்கான தொழில்நுட்ப ஊழியர்களின் (பணிச்சுமை இல்லாத பதவிகள்) தலைமைப் பொறியாளர், மின்தொடரைப்பு தலைமையிலான குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது.
இதனையடுத்து, துணை நிலையங்களில் உள்ள பணிகளின் தற்போதைய தன்மை மற்றும் பொறுப்புகள் பற்றிய விரிவான ஆய்வுக்குப் பிறகு, குழு தனது அறிக்கையை அனுப்பியுள்ளது. குழுவின் அறிக்கை விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக வாரியத்தின் முன் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பணியிடங்களை மாற்றி அமைத்து செயல்படுத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பு: இந்த நிலையில், தமிழ்நாடு பவர் இன்ஜினியரிங் ஆர்கனைசேஷன்(Tamilnadu Power Engineers Organisation) இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில், மின்தொடரமைப்பு கழகத்தில் செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், உதவிப் பொறியாளர் பணியில் சாத்தியமில்லாதவைகளை செயல்படுத்த உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் 2020 மே 5ஆம் தேதி வேலைப்பளுவுக்கு அப்பாற்பட்டு ஊழியர்களின் பணியை மறு மதிப்பீடு செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், கடந்த மார்ச் 5-ல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகத்தின் கட்டுப்பாட்டில் 230 kV துணை மின்நிலையங்களையும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பராமரிப்பில் 45 ஆண்டுகளாக இருந்த 110 kV துணை மின் நிலையம் பராமரிப்பு பணியையும் மாற்றியுள்ளது.
இதையும் படிங்க: தொடர்ந்து தனியாருக்குத் தாரை வார்ப்பு: புளியந்தோப்பு புதிய துணை மின் நிலைய பராமரிப்பு பணிக்கு ரூ.202.39 கோடி ஒதுக்கீடு!
மேலும், துணை மின்நிலையங்களில் பணியாற்றுவதற்கு செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர் பணியில் அனுமதிக்கப்பட்ட 1,074 இடங்களையும் ரத்து செய்துள்ளது. இதனால் மின் நுகர்வோர்களுக்கு மின் சேவை வழங்குவதில் குறைபாடு ஏற்படுவதுடன், வாரியத்திற்கு வருவாய் இழப்பும் ஏற்படும்.
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் கீழ் உள்ள 230 kV திறனில் 117 துணை மின்நிலையங்கள் இயங்கி வருகிறது. செயற்பொறியார்கள் 117 பேர் பணியாற்ற வேண்டும். சீரமைப்பில் 117 பணியிடங்களை 44 என குறைத்து விட்டு, 74 பதவிகளை ரத்து செய்துள்ளது. இந்த 117 துணை மின்நிலையங்களையும் 44 செயற்பொறியார்கள் (இயக்ககம்) கண்காணிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 110 kV துணை மின்நிலையங்கள் 892 செயல்பட்டு வருகிறது. அதனை உதவி பொறியாளர் இயக்கம் கட்டுப்பாட்டில் ஒருவருக்கு 2 துணை மின்நிலையம் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
446 பணியிடங்கள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக உள்ள உதவி பொறியாளர் பணியிடங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. பொறியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கப்பட்டுள்ளதால், மின் நுகர்வோர்களுக்கு தரமான மின்சாரத்தை வழங்க முடியாத நிலைமை ஏற்படும். மேலும் மின்தடைகளும், மின் விபத்துகளும் ஏற்படும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் 2020 ஆகஸ்ட் 12 முதல் டிசம்பர் 1 வரையில் சங்கராபுரம், சமயநல்லூர், திருப்பத்தூர், புளியந்தோப்பு துணை மின் நிலையங்களின் பராமரிப்பு பணிகளை தனியார் நிறுவனங்கள் மூலம் செய்வதற்கு ஒப்பந்தம் வழங்கியது. மின்நிலையப் பணிகள் தனியாருக்கு ஒப்பந்தம் வழங்குவதை தொழிற்சங்கங்கள் மிகக் கடுமையாக எதிர்த்து போரட்டம் நடத்தியதால், அந்த உத்தரவுகளை மின்சார வாரியம் ரத்து செய்தது.
இந்த நிலையில், கடந்த மார்ச் 3ஆம் தேதி போடப்பட்டுள்ள உத்தரவில், 2020-இல் மின்சார வாரியம் துணை மின் நிலையங்களை முழுமையாக இயக்கம் மற்றும் பராமரிப்பை தனியாருக்கு வழங்கியதைப் போன்று மீண்டும் கொடுத்துவிட்டு, அதற்கான ஒப்பந்தப் பணிகளையும், ஒப்பந்தப் பணி செய்தமைக்கான பணித் தொகை பட்டியலை தயார் செய்வது போன்ற பணிகளை மட்டும் செய்வதற்காக பொறியாளர்களுக்கு பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மின்வாரியத்தில் வேலைப்பளு ஒப்பந்தப்படி, 2019ஆம் ஆண்டு வரையில் அனுமதிக்கப்பட்ட பதவிகளில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகள் காலியாக உள்ளது. மேலும், 2020 முதல் 2023ஆம் ஆண்டு வரையில் புதியதாக அமைக்கப்பட்ட துணை மின்நிலையங்களுக்கும் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தில் உள்ளதாகவே தெரிகிறது. துணை மின் நிலைய தனியார்மயத்தை மின்வாரியம் மறைமுகமாக திணிப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. எனவே, பணி மறு சீரமைப்பு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த உள்ளதால், பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காத நிலை உருவாகும். மேற்பார்வை பொறியாளர், செயற்பொறியாளர் பணியிடங்களுக்கான பதவி உயர்வும் இருக்காது. வேலைப்பளு அதிகரித்து விபத்துகள் ஏற்படும். தமிழ்நாட்டில் உள்ள மின்சார வாரியத்தின் துணை மின் நிலையங்களை தனியாரிடம் மீண்டும் ஒப்படைப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திருப்பத்தூர் துணைமின் நிலைய பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு!