சென்னை: தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும், கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும், பூரண மதுவிலக்கை நோக்கி அரசு பயணிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றனர். இதற்கு வியாபாரிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் சி.பொன்னுசாமி தலைமை வகித்தார். பின்னர், இந்த ஆர்ப்பாட்டம் குறித்து சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "சென்னை புதிய காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றுள்ளார், அவருக்கு எங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேநேரம், அவரிடம் கோரிக்கை ஒன்றை வைக்கிறோம். எங்களைப் போன்ற அமைப்புகளுக்கு நுங்கம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்குவதில்லை. ஆனால் திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகளுக்கு அனுமதி வழங்குகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தற்போது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள் சங்கம் மட்டுமல்லாது, இன்னும் சில சங்கங்கள் இணைந்துள்ளன. பூரண மதுவிலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தில் எதற்காக கள்ளுக்கடைகளைத் திறக்க கோருகிறோம். போதைக்கு மாற்று போதையா என்ற கேள்வி கண்டிப்பாக வரும்.
இதை நான் சொல்லவில்லை. அமைச்சர் முத்துசாமி சொல்லியிருக்கிறார். மதுப்பிரியர்கள் குடியை நிறுத்திவிட்டால் அவர்களுக்கு கஷ்டமாக இருக்கும். அதனால் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவில்லை என கூறியிருக்கிறார். அதேபோல கனிமொழி எம்பியும் சொல்லியிருந்தார், 'திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிடுவோம்' என்றார். ஆனால் அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கள்ளச்சாராயத்தால் 63 பேர் உயிரிழந்துள்ளனர்" என்றார்.
தொடர்து பேசிய அவர், "இன்னும் கள்ளச் சாராய விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தவறுகளை மறைக்க ரூ.10 லட்சம் இழப்பீடு. யாருடைய வரிப்பணத்தில் இதை செய்கின்றனர்? விரைவில் குடிகார மாநிலமாக தமிழகம் மாறும். எனவே, பூரண மதுவிலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தில் மதுப்பிரியர்களால் உடனடியாக குடியை நிறுத்த முடியாது. அதற்கு சில கால அவகாசம் தேவை.
இதையொட்டியே கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இதனால் தென்னை விவசாயிகள் முதல் பனை விவசாயிகள் வரை பயனடைவார்கள். ஏற்கனவே கள்ளுக்கடைகளை திறக்க முற்பட்டபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த முறை குண்டுகளை நெஞ்சில் வாங்கிக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம்" இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் ஷிப்பிங் மோசடி.. மேனேஜருக்கே விபூதி அடித்த கோவை கும்பல்.. பின்னணி என்ன?