சென்னை: கல்வி, வேலை வாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, தூத்துக்குடியைச் சேர்ந்த கிரேஸ் பானு என்ற மூன்றாம் பாலினத்தவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயணா பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்ட பின், மூன்று மாதங்களில் இப்பணிகள் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கணக்கெடுப்பின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உரிய முடிவை எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்! தீர்ப்பெழுதப் போகும் மக்கள் - Lok Sabha Election 2024