சென்னை: பிரதமர் மோடி மூன்றாவது முறையாக நாளை பிரதமாராக பதவி ஏற்க உள்ள நிலையில், பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னையிலிருந்து இன்று (ஜூன் 8) விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “மிகுந்த மகிழ்ச்சியான மனநிலையோடு டெல்லி செல்கின்றேன். ஏனென்றால் பிரதமர் மூன்றாவது முறையாக ஒரு பலம் வாய்ந்த பிரதமராக இந்த நாட்டை வளம் பொருந்திய நாடாக மாற்றுவதற்கான முயற்சியை செய்து வருகிறார். மூன்றாவது முறையாக அவர் பிரதமராக பதவி ஏற்பதை மகிழ்வோடு கண்டு களித்து, அவருக்கு வாழ்த்துக்களைச் சொல்வதற்காக செல்கிறேன்.
இந்த தேர்தலில் அதிக இடங்களை வாங்கிய பாஜகவை, குறைவான வாக்குகளை வாங்கிய காங்கிரஸ் குறை கூறிக் கொண்டிருப்பது அவர்களின் அறியாமையை காண்பிக்கிறது. கூட்டணி ஆட்சி எல்லாம் நடத்த முடியாது, கூட்டணி ஆட்சி நடத்துவது சிரமம் என சிதம்பரம் கூறுகிறார். அவர்களுக்கு கட்சி நடத்துவதே சிரமமாக உள்ளது.
காங்கிரஸ் அனுபவம் வேறு, பாஜகவின் அனுபவம் வேறு என்பதை தான் பிரதமர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். எவ்வளவு விமர்சனம் வந்தாலும் நான் எனது கருத்தை வலிமையாகச் சொல்வேன். கூட்டணி பற்றி நான் ஏற்கனவே சொல்லிட்டேன். அது ஜெயக்குமார் சொன்னாலும் சரி, யார் சொன்னாலும் சரி 2026க்கு அதிக நாட்கள் இருக்கிறது.
அந்தந்த தேர்தலுக்கு ஒரு வியூகம் அமைக்கப்படும். இந்த வியூகம் என்ன என்றால், ஒன்று அந்த கூட்டணியை பலப்படுத்துவதற்கு, இன்னொன்று எதிர் கூட்டணியை பலவீனப்படுத்துவதற்கு. வலிமையான கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடும், அதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். எந்த கருத்து சொன்னாலும், அதற்கு எவ்வளவு விமர்சனம் வந்தாலும் அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.
செல்வப்பெருந்தகை பாஜகவிற்கு வந்த ஓட்டு எல்லாம் பாமகவின் ஓட்டு என்றால், காங்கிரசுக்கு வந்த ஓட்டு எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓட்டு. இதை ஸ்டாலின் மறுப்பாரா? அப்படி என்றால் தனியாக நின்று இருக்க வேண்டும். செல்வப்பெருந்தகை தேர்தலில் தனியாக நின்றால் எந்த இடத்திலும் டெபாசிட் கூட வாங்கியிருக்க முடியாது.
அப்படிப்பட்ட ஒரு கட்சியை வைத்துக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோலில் ஏறிக் கொண்டு இன்னைக்கு பாஜகவை விமர்சனம் செய்வதற்கு அவருக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. காங்கிரஸ் திமுகவால் தான் வெற்றி பெற்றுள்ளனர். திமுக மட்டுமின்றி, அவருடைய கூட்டணி கட்சியும் இருந்ததால் ஜெயித்திருக்கிறார்கள்” என்றார்.