சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொள்ள, வரும் 9ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். அவர் தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு, சென்னை பாண்டி பஜாரில் ரோடு ஷோ நடத்துகிறார்.
இதற்கான முன்னேற்பாடுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதனை, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்திரராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "வரும் 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னைக்கு வரும் பிரதமர் மோடி, சுமார் 1.5 கி.மீ தூரம் பேரணியாக வந்து மக்களைச் சந்திக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மற்ற வேட்பாளர்களுக்கும் பிரதமரின் இந்த பேரணி பக்கபலமாக இருக்கும்.
சென்னையில் வாக்கு சேகரிக்கச் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த பேரணியில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். பிரதமரைப் பார்க்க வருகிறோம் என மக்களும் தங்களுடைய ஒப்புதலைச் சொல்லி இருக்கின்றனர். இந்த பேரணியில் இதுவரை சென்னை பார்க்காத பிரமாண்டமான கூட்டமாக இருக்கும்.
தென்சென்னை, பாஜக வெற்றி பெறும் தொகுதியாக இருக்கும் என தெரிவித்திருக்கின்றனர். அதனால் மகிழ்ச்சியாக தேர்தல் வேலைகளைப் பார்த்து வருகிறோம். பொதுக்கூட்டம் என்றால், கட்சிக்காரர்கள் தான் வர முடியும். ஊர்வலம் என வரும்போது பொதுமக்கள் அதிகமாக கலந்து கொள்ளலாம். எனவே, எல்லா இடங்களிலும் ஊர்வலத்திற்கு மக்கள் விருப்பப்படுவதாலும், பொதுமக்களைச் சந்திக்க வேண்டும் என்பதாலும் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
தேர்தல் களத்தில் நாங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லிக்கொண்டு தேர்தலைச் சந்திக்கிறோம். அதுதான் எங்களுக்கு உரிய தகுதி. மற்றவர்களுக்கு ஓட்டு போட்டால் யார் பிரதமராக வருவார்? மக்களைச் சார்ந்தவர்கள் வந்தால் தான் மக்களுக்கு நல்லது நடக்கும். கேட்டது கிடைக்கும், திட்டங்களைக் கொண்டு வர முடியும்.
பிரதமர் வருகிறார் என்பதால், பாண்டி பஜாரில் கடைகளை மூடி விடுவார்கள் என்று நினைக்க வேண்டாம். அவர் வரும் ஒரு மணி நேரத்தில் வியாபாரத் தளங்கள் எல்லாமே திறந்திருக்கும், மூடுவதற்கு இல்லை. எந்த இடையூறும் இல்லாமல் பிரதமர் மக்களை சந்திக்க வருகிறார்.
பாஜகவிற்கு ஆதரவு இல்லை என்பது தவறான தகவல். நாங்கள் 300-ல் ஆரம்பித்து 400-ல் வந்து நிற்கிறோம். எங்களுடைய மத்தியில் உற்சாகம் அதிகரித்து வருகிறது. எதிரிகளின் செயலற்ற தன்மையும், எங்களின் செயலாற்றும் தன்மையும் எங்களுக்கு சாதகமாக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: தேர்தல் விதிமுறை மீறல்.. என்டிஏ கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மீது வழக்கு - Lok Sabha Election 2024