புதுக்கோட்டை: தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநிலத் தலைவர் கே.எம்.சரீப் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.எம்.சரீப், “தொடர்ச்சியாக தமிழக அரசின் மீது மோசமான தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிற தமிழ்நாடு ஆளுநர் ரவியை, மத்திய அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும். அண்ணா சொன்னது போல, கவர்னர் பதவி என்பது நாட்டிற்கு வீட்டிற்கு தேவையில்லாதது. ஆட்டிற்கு தேவையில்லாத தாடி. அந்த தாடி தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என 40 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஆளுநராக உள்ள முன்னாள் உளவுத்துறை தலைவர் ரவியை, மத்திய அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு இந்த ஆளுநர் தேவையா, இல்லையா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தினோம். அதில், தமிழக மக்கள் இந்த ஆளுநர் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என்று வாக்களித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றம் மிகச்சிறந்த தீர்ப்பை நாட்டு மக்களுக்கு கொடுத்துள்ளது. தேர்தல் பத்திரம் (Electoral bond) என்ற பெயரில், தங்களுக்கு வேண்டிய முதலாளிகளிடமிருந்து நன்கொடை வாங்குகின்ற வேலையை கடந்த ஓராண்டாக பாஜக செய்து வந்துள்ளது. அது தவறு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை வரவேற்கிறோம். இது பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி என நாங்கள் நினைக்கிறோம்.
உயர் நீதிமன்ற தீர்ப்புகளை புதுக்கோட்டை நகராட்சி ஒருபோதும் மதிப்பதில்லை. புதுக்கோட்டை நகராட்சியை, மாநகராட்சியாக மாற்றுகிற திட்டம் ஒரு மோசமான திட்டமாக கருதுகிறோம். புதுக்கோட்டை நகராட்சியை பேரூராட்சியாக மாற்ற வேண்டும். ஏனென்றால், நகராட்சியில் உள்ள எந்த வேலை திட்டமும் புதுக்கோட்டையில் கிடையாது. இதை மாநகராட்சியாக மாற்றினால் வரி உயரும், எனவே வாய்ப்பு இருந்தால் தமிழக அரசு புதுக்கோட்டை நகராட்சியை பேரூராட்சியாக மாற்ற வேண்டும்.
புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள கடனை அடைப்பதற்கு இன்னும் 100 ஆண்டுகள் ஆகும். புதுக்கோட்டையில் உள்ள குமுந்தன் குளம், பழனியாண்டி ஊரணி நகராட்சி அலுவலர்களால் விலை பேசி விற்கப்பட்டுள்ளது. இதற்காக உயர் நீதிமன்றத்தில் கடந்த 7ஆம் தேதி வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளேன்.
இந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் இந்த 2 குளங்களின் ஆக்கிரமிப்பையும், ஆறு வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத் தீர்ப்பை கிடப்பில் போடாமல், புதுக்கோட்டை நகராட்சி குளங்களை மீட்க வேண்டும்.
குமுந்தன் குளத்திலிருந்து திருமயம் கோட்டை வரை ரகசிய சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. அதை சுத்தம் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நகராட்சி உடனடியாக செயல்படுத்த வேண்டும். இதை நிறைவேற்றவில்லை என்றால், பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து 13 மாதங்கள் ஆகியுள்ளது. ஆனால், இன்று வரை இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. கொலை வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலை இருக்கும்போது, பெரும்பான்மை மக்களை பாதித்த ஒரு பிரச்னையில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை பாதிக்கப்பட்ட மக்களையே குற்றங்களை ஒப்புக் கொள்ளச் சொல்லி மிரட்டிக் கொண்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனை ஆதரித்தோம். ஆனால், அவர் தற்போது பாஜகவை நோக்கி நகர்ந்து விட்டார். எங்களைப் பொறுத்தவரை, ஒரே நோக்கம் பாஜகவுக்கு எதிராக வாக்களியுங்கள் என்ற கோரிக்கையை இந்த தேர்தலில் நாங்கள் முன்வைக்கின்றோம்.
சிறைவாசிகள் விடுதலையைப் பொறுத்தவரை, 49 பேர் பெயரை மாநில அரசாங்கம் ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. அந்த 49 பேரில் 20 பேருக்கு மட்டும்தான் ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார். அதில் 10 பேர் இஸ்லாமிய சிறைவாசிகள், இன்னமும் இஸ்லாமிய சிறைவாசிகளில் 26 பேர் சிறைச்சாலைகளில் உள்ளனர். அவர்கள் விடுதலையை உடனடியாக செய்ய வேண்டும். மேலும், ஆளுநரை காரணம் காட்டாமல் தமிழக அரசு உடனடியாக சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.
ஆளுநர் 49 பேர் விடுதலைக்கு கையெழுத்திடவில்லை என்றால், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மாநில அரசாங்கமே அவர்களை விடுதலை செய்ய அதிகாரம் உள்ளது. வேங்கை வயல் வழக்கு விசாரணையில் அரசியல் அழுத்தம் இருப்பதாக கருதுகிறேன். திமுக ஓட்டைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், எங்களைப் போன்றவர்கள் நாட்டைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக தலித்துகள் மீது அதிகபட்ச தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமான தாக்குதல் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக காவல்துறை இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, வன்கொடுமை பாதிக்கப்பட்ட மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தை அறிவிக்க வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சி என்பது, இந்த தேசத்திற்கு தேவையில்லாத ஒரு கட்சி என எங்களைப் போன்றவர்கள் நினைக்கிறோம். பாஜகவில் இருந்து ஒரு செங்கல் விழுந்து வந்தால் கூட அந்த செங்கலை தூக்கி சுமக்கக்கூடிய தேவை எங்களைப் போன்றவர்களுக்கு உள்ளது. ஒவ்வொரு ஜனநாயக சக்திக்கும் பிஜேபிக்கு எதிரான நிலைப்பாடு எடுக்க வேண்டிய தேவையும், அவசியமும் இருக்கிறது. அந்த அடிப்படையில் அதிமுக - பாஜகவை விட்டு வெளிய வந்ததை நாங்கள் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம், போற்றுகிறோம்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை, பாஜகவுக்கு எதிராக வாக்களியுங்கள் என்பதுதான் எங்களின் ஒரே நிலைப்பாடு. பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டில் அதிமுக தொடர்ச்சியாக இருக்குமேயானால், நிச்சயமாக சிறுபான்மையின மக்களின் வாக்குகள் அதிமுகவுக்கு போய் சேரும். எங்களைப் போன்றவர்களும் ஆதரிக்கிற நிலைமை எதிர்காலத்தில் வரலாம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்கள் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் கொடூரமான சித்திரவதைகளை அனுபவிக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி, சிறப்பு முகாம்களில் ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரும்புகிற நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். சாந்தன் எந்த நாட்டிற்கு போக வேண்டும் என விரும்புகிறாரோ, அந்த நாட்டிற்கு அவரை அனுப்பி வைக்க வேண்டும்.
சாந்தன் இலங்கைக்குச் சென்றால், அவருக்கு பாதுகாப்பு நிச்சயமாக இருக்கும். இந்தியா - இலங்கை இடையேயான சூழல் வெளியில் வேறு மாறியாக இருந்தாலும் கூட, உள்ளே வேறு மாதிரியாக உள்ளது. அந்த வகையில், இந்தியாவை விட இலங்கையில் சாந்தனுக்கு பாதுகாப்பு நிச்சயமாக இருக்கும். திராவிட மாடல் அரசு என சொல்லுகிற இந்த அரசாங்கம், உண்மையிலேயே திராவிட மக்களுக்கு ஆதரவான அரசாக இருக்கும் என்றால், அதை நிரூபிக்கின்ற வகையிலே வன்கொடுமைச் சட்டத்தில் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.