தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப்புகழ் பெற்று விளங்குகிறது. இக்கோயில் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் சிறந்து விளங்குகிறது. இக்கோயிலுக்கு, தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.
இந்நிலையில், சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக பெருவுடையார் சிலைக்கு சந்தனம், பால், நல்லெண்ணெய், திரவியப் பொடி, மஞ்சள் பொடி, அரிசி மாவு பொடி, தயிர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், கோயிலில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. 18 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை பெருவிழாவில் காலை, மாலைவேளைகளில் பல்லக்கிலும், சிம்மம், மேஷம், வெள்ளி மயில், சந்திர பிரபை, முத்துப்பல்லக்கு, பூதம், வெள்ளி யானை உள்பட பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: "உங்களுக்கு தான் ஓட்டு போட்டேன்" - வடிவேலு பாணியில் நயினார் நாகேந்திரனிடம் பெண் கூறிய வீடியோ! - Lok Sabha Election 2024