சென்னை: கடந்த 3 நாட்களாக நடத்தி வந்த பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.
காத்திருப்பு போராட்டம்
இதுதொடர்பாக, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகையன், பொதுச் செயலாளர் சங்கரலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; '' தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 நாட்களாக பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கடலோர மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பினை கருத்தில் கொண்டு 10 மாவட்டங்களுக்கு இந்த போராட்டத்திலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டது. மற்ற மாவட்டங்களில் மிக எழுச்சியாக போராட்டங்கள் நடைபெற்றது. தற்போது மேலும் சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகளை அரசு தரப்பில் அழைத்து 28ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, வருவாய்த்துறை அரசு செயலாளர் அமுதா உள்ளிட்ட உயர் அலுவலர்கள் வருவாய்த்துறை அலுவலர்களின் நிலுவைக் கோரிக்கைகள் அனைத்தும் விரைவாக பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், இவைகளில் சில கோரிக்கைகள் ஒரு மாத கால அவகாசத்தில் நிறைவேற்றப்படும் என உறுதியாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரயில் என்ஜினின் முன்பக்கத்தில் தலைமுடி சிக்கி கல்லூரி மாணவி மரணம்! இது எப்படி நிகழ்ந்தது?
ஒரு மாதத்திற்குள் அறிவிப்பு
மேலும், பல மாவட்டங்களில் அதிக மழை உள்ள நிலையில், பேரிடர் மேலாண்மைப் பணிகளுக்கு பாதிப்பின்றி, அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அரசுடனான பேச்சுவார்த்தையில், 38 மாவட்டங்களில் அலுவலக உதவியாளர் நிலையில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என உறுதியளிப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மைப் பிரிவில் கலைக்கப்பட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை விரைவில் மீண்டும் ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
கருணை அடிப்படையில் நியமனம்
அரசுப் பணியில் மரணமடையும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படை நியமனம் வழங்கப்படுவது, கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புதிய விதிகளால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் பரிசீலனை செய்து பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன கருதி விரைவில் கருணை அடிப்படையில் நியமனம் வழங்கிட வழிவகை செய்யப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அரசு அளித்துள்ள உறுதியை தொடர்ந்து, மாநில நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டத்தில், வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகளில் முன்னேற்றம் மற்றும் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொணடும், தமிழகதத்தில் மழை வெள்ள பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் நலன் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பணிகளை கருத்தில் கொண்டு போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைகக் முடிவுசெய்யப்பட்டுள்ளது'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்