சென்னை: தமிழ்நாட்டில் மார்ச் முதல் மே மாதம் வரை கோடை காலத்தில் 12.5 செ.மீ மழை பதிவாவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நேற்று (மே 20) வரை சுமார் 9.63 செ,மீ மழையே பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 7 விழுக்காடு குறைவானதே ஆகும். இந்த நிலையில், இன்று காலை முதல் தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில், சராசரியாக 1.77 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதில், அதிகப்படியாக 7.12 செ.மீ நாமக்கல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழைக்கு கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 24 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளது; 12 கால் நடைகள் இறந்துள்ளது.
இந்த நிலையில், வரும் 24ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கான வாய்ப்பு இருப்பதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினைச் சேர்ந்த 296 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் கன்னியாகுமரி, கோவை, நெல்லை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளனர்.
தற்போது கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா வரும் பயணிகள் பாதுகாப்புடன் இருக்குமாறும், முடிந்த அளவு சுற்றுலா வருவதைத் தவிர்க்குமாறும் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள், கூடுதல் அலுவலர்களுடன் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாகவும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் பேரிடர் மேலாண்மை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாலையை கடக்க முயன்றபோது வெள்ளத்தில் சிக்கிய நபர்.. கயிறு கட்டி மீட்ட கிராம மக்கள்!