திருநெல்வேலி: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள, 27 பேருந்துகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பேருந்தில் சட்டப்பேரவை தலைவர், அமைச்சர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் பயணம் செய்தனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது, "போக்குவரத்து துறை சிரமமான சூழலுக்கு சென்ற நிலையில் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் அதனை மீட்டு மீண்டும் புத்துயிர் ஊட்டியுள்ளார். மகளிர் விடியல் பயணம் என்ற திட்டத்தை அறிவித்து, அதற்கான நிதியை முதலமைச்சர் ஒதுக்கியதால் தான், போக்குவரத்து துறையில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்குச் சரியான நேரத்தில் ஊதியம் வழங்க முடிகிறது. மேலும் டீசல் மானியம் போன்றவற்றால் தான் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் 20% பேருந்துகள் கூட அரசின் மூலம் இயக்கப்படுவது கிடையாது. தமிழகத்தின் குக்கிராமம் வரை பேருந்துகள் அரசின் சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது, 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன. ஆனால் கடந்த 10 ஆண்டுளாக அதிமுக ஆட்சியில் குறைவான புதிய பேருந்துகள் தான் வாங்கப்பட்டன, போதுமான அளவு வாங்கவில்லை. இதனால்தான் பழைய பேருந்துகளை வைத்து ஓட்டும் நிலை உள்ளது.
நெல்லை மண்டலத்தில் புதிதாக 199 பேருந்துகள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 144 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நெல்லை மண்டலத்திற்கு புதிதாக 302 பேருந்துகள் வர உள்ளன. பிற மாநிலங்களில் ஆட்கள் ஏறி பேருந்து நிறைந்தால் மட்டுமே இயக்கப்படும். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லும் வகையிலான பேருந்துகள் தமிழக அரசின் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதிய போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே முதலமைச்சரின் உத்தரவுவாகும். கரோனா காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்த நிலையில் ஒவ்வொரு பகுதிக்கும் அதிக அளவு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக்குழு அறிவிப்பு.. யார் யார் தெரியுமா?