சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக எம்.பி. கனிமொழி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,"மாநிலக் கல்வித் திட்டத்தில் ஆளுநர் படித்திருக்கிறாரா? என்பது தெரியவில்லை.
நாங்கள் மாநில பாடத்திட்டத்தில் தான் படித்துள்ளோம். இங்கு பல மருத்துவர்கள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் தான். இன்று சிறந்த மருத்துவராக பணியாற்றி வருகின்றனர். இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான். அவர்கள் 30 ஆண்டுகள் கடந்து சாதிக்க வேண்டியதை உயர்கல்வித் துறையில் நாங்கள் இன்றே சாதித்துள்ளோம்.
தமிழக ஆளுநர் மாநில பாடத்திட்டம் குறித்து முழுவதுமாக தெரிந்து தான் அதுகுறி்த்து சொன்னாரா என தெரியவில்லை. மேலும் பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு தமிழ்நாட்டில் அனுமதி கொடுக்காமல் இல்லை. அதன் மூலமாக புதியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு திணிக்க முயல்வதைதான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
புதியக் கல்விக் கொள்கையின் நிறைய விஷயங்களை தமிழ்நாடும், மற்ற மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. கல்வி பொதுப்பட்டியிலில் இருக்கிறது. மத்திய அரசு தனது கருத்துகளை மற்றவர்கள் மீது திணிக்க நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
எஸ்எஸ்ஏ (SSA- சர்வ சிக்ஷா அபியான்) என்பது வேறு திட்டம். பிஎம்ஸ்ரீ (PM SHRI SCHOOLS) என்பது வேறு திட்டம். ஆனால் கழுத்தில் கத்தி வைத்துக் கொண்டு, இதற்கு ஒப்புக்கொண்டால் தான் அந்த நிதியைத் தருவேன் எனக் கூறுவது நிச்சயமாக நியாயம் இல்லாத ஒன்று. மேலும் மத்திய அரசு எஸ்எஸ்ஏ நிதியை நிறுத்தியுள்ளது தொடர்பாக முதலமைச்சர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவுடன் முடிவெடுப்பார்" என்று கனிமொழி தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்ற செந்தில் பாலாஜி!