சென்னை: சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் ஏபிவிபி (ABVP) அமைப்பினர் கலந்துகொண்டு, சாதி, மத ரீதியில் பிளவு ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டதாகக் கூறி, கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சட்டக் கல்வி படிக்கும் மாணவர்கள் தவறான செயல்களில் ஈட்டுபட்டால், அவர்கள் சட்டப்படிப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவர் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளது.
அதில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சீர்மிகு சட்டப்பள்ளி - ஒருங்கிணைந்த ஐந்தாண்டு எல்.எல்பி. (ஹானர்ஸ்), மூன்றாண்டு எல்.எல்பி. (ஹானர்ஸ்) மற்றும் எல்எல்.எம் சட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்கள் சட்டப்படிப்பின் மீது கவனம் செலுத்தாது தவறான செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்கள் அவர்தம் சட்டப்படிப்பினை தொடர இயலாது என தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தின் புல முதன்மையர் பாலாஜி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சீர்மிகு சட்டப் பள்ளி சட்டக் கல்வியின் தரத்திலும், மாணவர்களை வருங்கால வழக்குறைஞர்களாகவும், நீதிபதிகளாகவும் மற்றும் பிற உயரிய பதவிகள் வகிப்பவர்களாகவும் உருவாக்கி வருகிறது.
தேசிய அளவில் இயங்கிவரும் சட்டப் பள்ளிகளுக்கிடையே இச்சட்டப் பல்கலைக்கழகம் முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது. இந்த சிறப்பு வாய்ந்த தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் ஒரு சில மாணவர்கள் படிப்பின் மீது கவனம் செலுத்தாது, சக மாணவர்களை உடல் ரீதியான தாக்குதலில் ஈடுபடுவதும், தங்களுக்குள்ளே தாக்கிக் கொள்வதும், வெளியிலிருந்து வருபவர்களை தாக்குவதும் நடந்து வருகிறது.
இது சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதற்கு சமம் ஆகும். சட்டப் பல்கலைக்கழகம் என்ற முறையில் இச்செயல்பாடுகள் ஏற்கதக்கதல்ல. இதுவரையில் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களை தற்காலிகமாக விலக்கி வைக்கப்படுவது வழக்கம். ஆனால், இனிவரும் காலங்களில் இத்தகைய செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுவதோடு, சீர்மிகு சட்டப்பள்ளியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்" என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதிய குற்றவியல் சட்டங்கள்; ஜூலை 8-இல் நீதிமன்றம் புறக்கணிப்பு.. சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு!