திருநெல்வேலி: தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் முகாமிட்டு, பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சட்ட - ஒழுங்கு விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் 2வது நாளாக பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து டிஜிபி தலைமையில் ஆலோசனை கூட்டம்
— Tirunelveli City Police (@CityTirunelveli) September 28, 2024
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் தலைமையில் சட்டம் & ஒழுங்கு குறித்து ஆலோசனை கூட்டம் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. pic.twitter.com/cNLDOvlJYc
அப்போது காவலர்களுக்கு பணி மாறுதலில் உள்ள சிக்கல்கள், பணி உயர்வு பெற்ற நிலையில் ஊதிய முரண்பாடு, பதவி உயர்வு தொடர்பான கோரிக்கைகள், பணி இடத்தில் வழங்கப்பட்ட தண்டனைகள் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை, தமிழக டிஜிபி-ஐச் சந்தித்து காவலர்கள் மனுக்களாக அளித்தனர்.
இதையும் படிங்க : காதலனை சம்பவம் செய்த இளம்பெண்.. 800 ரூபாய்க்கு கிடைத்த அடியாட்கள்.. புதுக்கோட்டை ஷாக்!
தமிழக டிஜிபியிடம் வழங்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை மேற்கொள்வதற்காக, தமிழக காவல்துறை தலைமையகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட இரண்டு ஏஐஜிக்கள் சம்பந்தப்பட்ட மனு தொடர்பாக விரிவான விசாரணையையும் நடத்தினர்.
இந்த கூட்டத்தில் பேசிய டிஜிபி வெவ்வேறு மாவட்டங்களில் கணவன் - மனைவி, காவல்துறையில் பணியாற்றினால் ஒரே மாவட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை, பெண் காவலர்களுக்கு குழந்தை பிறந்திருந்தால் கேட்ட இடத்திற்கு பணி மாறுதல் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த காவல்துறை குறைதீர் கூட்டத்தில் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் ரூபேஷ் குமார் மீனா, திருநெல்வேலி சரக டிஐஜி மூர்த்தி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் டிஜிபி புதிய மரக்கன்றுகளையும் நடவு செய்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்