சென்னை: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், பணிபுரிந்து வரும் புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜி ஜகந்நாதனை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்தி உள்ளதாக காவல்துறையினர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர்.
அதில், "ஏற்கனவே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, எழும்பூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட 8 மருத்துவமனைகளில் காவல் நிலையங்களை செயல்பட்டு வருகிறது.
அதேபோல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கிண்டி கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனை, ராயபுரம் அரசு மருத்துவமனை ஆகிய 3 மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருவதாகவும், இதில் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மருத்துவருக்கு கத்திக்குத்து: என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு - அமைச்சர் மா.சு தகவல்!
இதைத் தவிர்த்து சென்னையில் உள்ள மேலும் எட்டு அரசு மருத்துவமனைகளில் புதிதாக இன்று முதல் புறக்காவல் நிலையங்கள் செயல்படும். அதாவது, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, காந்திநகர் அரசு மருத்துவமனை, அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை, கே.கே நகர் அரசு மருத்துவமனை, கே.கே நகர் இஎஸ்ஐ மருத்துவமனை, அமைந்தகரை மகப்பேறு அரசு மருத்துவமனை மற்றும் பெரியார் நகர் அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் புறக்காவல் நிலையங்கள் செயல்படும் எனவும் இதில் உதவி ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள்," எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால், கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் (டிஜிபி) உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காவல்துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டு இரவு நேர பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் ரோந்து காவலர்கள் மற்றும் ரோந்து வாகனங்களை பயன்படுத்தி அனைத்து மருத்துவமனைகளையும் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் கவனத்திற்கு வந்தால் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து மருத்துவமனை டீன்கள் மற்றும் மருத்துவமனை பொறுப்பாளர்களுக்கு பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து தொடர்பில் இருக்க டிஜிபி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்