சென்னை: கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாகக் குற்றம் சுமத்தி கைது செய்வதுடன், அவர்களின் படகு மற்றும் வலைகளைக் கைப்பற்றும் செயல் தொடர்கதையாக நீடித்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாகக் கடந்த பிப்.4ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 23பேரை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம்சாட்டி, அவர்களின் படகுகள் மற்றும் வலைகளைக் கைப்பற்றி சிறையில் அடைத்தது.
இந்நிலையில், அவர்கள் மீதான வழக்கு நேற்று முன்தினம் (பிப்.16) இலங்கை ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், கைது செய்யப்பட்ட 23மீனவர்களில் 20பேரை விடுதலை செய்து, மீதமுள்ள மூன்று மீனவர்களில் இருவருக்கு தலா 6மாதம் சிறைத் தண்டனையும், இரண்டாவது முறையாக எல்லை தாண்டிய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள மற்றொருவருக்கு ஓராண்டு சிறையும் விதித்து உத்தரவிட்டது.
இலங்கை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ராமேஸ்வர மீனவர்கள் போராட்ட கொடியைத் தூக்கியுள்ளனர். தமிழக மீனவர்களுக்கான தீர்ப்பிற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், தமிழ்நாடு அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், ராமேஸ்வர மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ராமேஸ்வர மீனவர்கள். மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் அனைத்திலும் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது X வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டதாவது, "தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது நடவடிக்கைக்கு உள்ளாவது மிகுந்த கவலையளிக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில், இத்தகைய கைது நடவடிக்கைகள் மிகவும் அதிகரித்திருக்கின்றன. இக்காலகட்டத்திற்குள் மட்டும் 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைவிட அதிர்ச்சியளிப்பது என்னவென்றால், மூன்று மீனவர்களை 'மீண்டும் மீண்டும் குற்றம் புரிபவர்' (habitual offender) பட்டியலில் அநியாயமாகச் சேர்க்கப்பட்டு, அவர்களை விடுவிக்காமல் தொடர்ந்து சிறையில் அடைத்திருப்பதுதான்.
இது நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பது மட்டுமல்லாமல், அவர்களது படகுகளை நாட்டுடைமையாக்கும் இலங்கை அரசின் செயல் சிறுகச் சிறுக சேர்த்த மீனவர்களின் சேமிப்புகளையும் அழிக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் உடனடியாக இதில் தலையிட்டு நமது மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதையும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும் எனத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் சார்பாகவும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
இதனை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி, நமது மீனவர்களின் நலனைக் காக்கும் வகையில் உறுதியான நடவடிக்கையை எடுத்திட வேண்டும். ஏனென்றால், அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைமிகு இந்தியர்களும் கூட (not just TAMILS but proud INDIANS)!" எனப் பதிவிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான நிரந்தர தீர்வு காண்பதற்காக மீனவர்கள் அவர்களின் வாழ்வாதார பாதிப்பையும் பொருட்படுத்தாமல் கடந்த இரண்டு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசுக்கு நாள் ஒன்றுக்கு 10கோடி ரூபாய் வரையில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு சிறை தண்டனை; படகுகளில் கருப்பு கொடி ஏற்றி வேலைநிறுத்தப் போராட்டம்!