சென்னை: தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 23) ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க சார்பாக என்.ஆர்.இளங்கோ, ஆர்.எஸ்.பாரதி, அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக எஸ்.கே.நவாஸ், பாஜக சார்பாக கராத்தே தியாகராஜன், தேமுதிக சார்பாக சதீஷ் குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பெரியசாமி மற்றும் ரவிந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆறுமுக நயினார் மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பாக சத்தியமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது குறித்தும், பிரச்சாரத்தின் போதும், தேர்தல் பொதுக்கூட்டங்களின் போதும் அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது குறித்தும், அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டன.
தேர்தல் நாளான்று வாக்குச்சாவடி பகுதிகளில் அரசியல் கட்சிகளின் முகவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டியவை உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை தலைமைத் தேர்தல் அதிகாரி, அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கினார். குறிப்பாக, தேர்தலை நேர்மையாகவும், எந்தவித குழுப்பமுமின்றி சுமூகமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சி பிரதிநிதிகள் தரப்பில் முன்வைக்கபட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “வழக்கமாக நடைபெறும் கூட்டம் தான் இது. வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடிகளில் அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும், தேர்தல் பணியாளர்களுக்கு அடிப்படை வசதியும், கழிவறை வசதியும் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
வந்தே பாரத் மற்றும் மெட்ரோ ரயிலில் இருக்கக்கூடிய விளம்பரங்களை தேர்தல் விதிமுறைகளின் படி உடனடியாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு தனித்தனியே வாகனங்கள் ஒதுக்கப்படுமா என்ற விளக்கத்தையும் கேட்டுள்ளோம்” எனக் கூறினார்.
தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் அமைதியாக, நியாயமாக, அத்துமீறல் இல்லாமல் நடைபெறும் வகையில் தேர்தல் ஆணையம் பணிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
85 வயதிற்கு மேற்பட்டோருக்கு வழங்கும் தேர்தல் வாக்கு படிவங்களை, ஆளுங்கட்சிக்கு சாதகமாக கொடுக்கக்கூடாது. வயது முதிர்ந்த, மாற்றுத் திறனாளிகளின் இல்லம் சென்று, அவர்கள் வீடுகளில் இருந்தே வாக்களிக்க விரும்புகின்றனரா அல்லது வாக்குச்சாவடிக்கு செல்ல விரும்புகின்றனரா என அவர்களது இசைவு பெற வேண்டும், அவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க விரும்பினால் அதை அனுமதிக்கலாம்.
வீடுகளிலேயே வாக்களிக்க விரும்பினால், அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையில் வீடு தேடிச் சென்று வாக்குகளைப் பெற வேண்டும். ஆளுங்கட்சி சுவரொட்டி, பேனர்கள் பல இடங்களில் அகற்றாமல் இருப்பதை ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம். விருப்பு வெறுப்பின்றி அனைத்து கட்சி பேனர்களையும் அகற்ற வேண்டும். பூத் சிலிப் விநியோகத்தில் புகார் எழாத வகையில் நடவடிக்கை எடுக்க கோரினோம்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த கோரினோம். வாக்குப்பதிவை முறையாக கண்காணிப்பு கேமராக்களில் பதிவு செய்து, அதை உடனடியாக அழித்துவிடாமல் தொடர்ந்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளோம். அரசின் குடிமைப்பொருள் வாகனங்கள் மூலம் பணம் கொண்டு செல்லப்படுவதாக தகவல் வந்துள்ளது. பெரியளவில் மேற்கொள்ளப்படும் மின்னணு பணப்பரிமாற்றங்களையும் கண்காணிக்க கோரியுள்ளோம்.
தனியார் வாகனங்கள் மட்டுமின்றி, அரசு வாகனங்களையும் கண்காணிக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் மின் விநியோகம், கழிவறை வசதி முறையாக இருக்க வேண்டும் என்று கூறினோம். அதேபோல, புகார்களை உடனுக்குடன் பெற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆணையம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்” என அவர் கூறினார்.
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் தலைவர் ரத்தினசபாபதி பேசுகையில், “திமுக, அதிமுக, பாஜக கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து எங்கள் கூட்டமைப்பின் 11 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மனு கொடுத்துள்ளோம்.
அதேபோல, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஆதாரிக்கும் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம். அவர்களுக்காக மேடை ஏறாமல் பிரச்சாரங்களை மேற்கொள்ள உள்ளோம். ஒரு வேலை எந்த கட்சியும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், நாங்கள் பிரச்சாரம் மேற்கொள்ள மாட்டோம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “சாதிவாரிக் கணக்கடுப்பை நடத்தாமல் மத்திய அரசும், மாநில அரசும் மாறி மாறி தாமதம் செய்து வருகின்றனர். மத்திய அரசு பணிகளில் 27 சதவீதம் இடஒதுக்கீட்டை இன்று வரை வழங்காமல் 18 சதவீதம் மட்டுமே வழங்கியுள்ளனர். மேலும், உயர்கல்வி அமைப்புகளில் OBC இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்களுக்கு வழங்கும் கல்வி உதவித் தொகையை இரண்டரை லட்சத்தில் இருந்து எட்டு லட்சமாக வழங்க வேண்டும். OBC சமுதாய மக்கள் மீது தொடர்ச்சியாக வன்கொடுமை தடுப்புச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.
பொருளாதரத்தில் பின்தங்கிய முன்னேறிய சமுதாயத்தினருக்கு கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதை கண்காணிக்க மாவட்ட வாரிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது போல, OBC சமுதாய மக்களின் உரிமைகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக கண்காணிக்க குழு அமைக்கவேண்டும், என கோரிக்கை வைத்தார்.