சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்றைய தினம் அவருடைய உறவினர்கள் வசம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அவருடைய அயனாவரம் இல்லத்தில் நேற்றைய தினம் உடல் வைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளியில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இறுதிச் சடங்கு முடியும் வரை போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என சென்னை காவல் ஆணையர் ரத்தோர் தெரிவித்திருந்தார்.
அரசியல் தலைவர்கள் அஞ்சலி: அதன்படி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி,தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
உடலை அடக்கம் செய்வது எங்கே?: இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யக் கோரி அவரது மனைவி பொற்கொடி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று காலை 9 மணிக்கு விசாரணைக்கு வந்தது. பிறகு மதியம் 12 மணிக்கு மீண்டும் வழக்குவிசாரணைக்கு வந்த நிலையில், பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை எங்கே அடக்கம் செய்வது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
இறுதி சடங்கு: இதற்கிடையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி சடங்குகளை புத்த துறவிகள் மேற்கொண்டனர். இதற்காக, அவரது உடல் வைக்கப்பட்டுள்ள பெரம்பூர் ஜந்தர் கார்டன் பள்ளி மைதானத்துக்கு துறவிகள் இன்று வருகை தந்தனர். ஐந்துக்கும் மேற்பட்ட புத்த துறவிகள் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் முன் நின்று மந்திரங்களை ஓதி சடங்குதள் செய்தனர்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் பழிவாங்கல் இல்லை; வேறு சிலர் மீது சந்தேகம் உள்ளது: சந்தீப் ராய் ரத்தோர் தகவல்!