சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் முதல் பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பொதுமக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனவும், நீண்ட காலம், நல்ல ஆயுளோடு வாழ வேண்டும் எனவும்” சீன மொழியில் அவரது புகைப்படத்தோடு எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சரின் விருப்பமான மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, தூத்துக்குடியில் கடந்த பிப்.28ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி தொடர்பாக நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில், பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், அனிதா ராதாகிருஷ்ணன், திமுக எம்பி கனிமொழி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
அந்த விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த ராக்கெட்டில் சீனா கொடியின் அடையாளம் இடம் பெற்றிருந்தது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
இது குறித்து அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், "திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு அளித்த இந்த விளம்பரத்தில் சீனா மீதான திமுகவின் அர்ப்பணிப்பு மற்றும் நமது நாட்டின் புறக்கணிப்பு வெளிப்படுத்துகிறது" எனக் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக தூத்துக்குடி எம்பி கனிமொழி கூறியதாவது, "சீன அதிபர் இந்தியா வந்தபோது, அவருடன் பிரதமர் மோடி நடைபயிற்சி சென்றார். சீனா நமது எதிரி நாடு என யாரும் அறிவிக்கவில்லை. இது தெரியாமல் நடந்த தவறு" எனக் கூறினார்.
இது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கூறியதாவது, குலசேகரன்பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைவது தொடர்பாக எங்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட நாளிதழ் விளம்பரத்தில், சீன அடையாளக் கொடியுடன் அச்சிடப்பட்டு சிறு தவறு நடந்துவிட்டது. இது தெரியாமல் நடந்த தவறு, அதில் எந்த நோக்கமும் இல்லை. எங்களுக்கு இந்தியாவின் மீது அதிக பற்றுள்ளது” என்று கூறினார்.
இதையும் படிங்க: பாஜக அழைப்பு விடுத்தது உண்மைதான்.. ஆனால் நான்.. திவ்யா சத்யராஜ் பிரத்யேக பேட்டி!