சென்னை: தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மத்திய அரசு உடனடியாகத் தொடங்க வேண்டுமென்றும், அத்துடன் சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பையும் சேர்த்தே நடத்தவேண்டும் என்றும் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "சமீபகாலமாக, சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. நேற்று முன்தினம்கூட, இந்தப் பேரவையிலே பாமகவின் சட்டமன்ற உறுப்பினர் கோ.க.மணி பேசும்போது கூட, சாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு கருத்தினைத் தெரிவித்திருந்தார்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் திமுகவின் கருத்தும் என்பதை முதலில் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது, மத்திய அரசால் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டம், Census Act 1948-ன் கீழ் மேற்கொள்ளப்படும் ஒரு மாபெரும் பணி. இது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசால் நடத்தப்பட்டுவரும் பணி.
மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தனித்தீர்மானம்!#CMMKSTALIN | #TNDIPR | #TNAssembly |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/d1R81lQVdq
— TN DIPR (@TNDIPRNEWS) June 26, 2024
மக்கள்தொகை தொடர்பான புள்ளிவிவரங்கள் அனைத்தும் இக்கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்பட்டு மத்திய அரசால் தொகுத்து வெளியிடப்படுகிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 3-ன் படி மத்திய அரசுதான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தவேண்டும். ஆனால், பொதுவெளியில் பரவலாகத் தெரிவிக்கப்படும் ஒரு கருத்து என்னவென்றால், புள்ளிவிவரச் சட்டம் 2008, அதாவது, Collection of Statistics Act, 2008-இன் அடிப்படையில் சாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ளலாம் என்பதாகும்.
இந்தச் சட்டத்தின்படி மாநில அரசுகள் சமூகப் பொருளாதார புள்ளிவிவரங்களைச் சேகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதே தவிர, இதே சட்டத்தின் பிரிவு 3 உட்பிரிவு (A)-ன்படி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 7-வது அட்டவணையிலுள்ள இனங்கள் தொடர்பாக புள்ளிவிவரங்கள் சேகரிக்க இயலாது.
அந்த 7-வது அட்டவணையில்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு 69-வது இனமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, இச்சட்டத்தின் பிரிவு 32-ன் படி மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948-ன் கீழ்
கணக்கெடுக்கப்படும் மக்கள்தொகை தொடர்பான புள்ளிவிவரங்களை (Census data) சேகரிக்க இயலாது என்று மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இப்பொருள் தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பொதுவெளியில் சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளபடி 2008-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் சட்டத்தின்கீழ் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள இயலாது.
சட்டப்படியாக நிலைக்கக்கூடிய கணக்கெடுப்பு என்றால், அது மத்திய சட்டமான மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவேதான், இப்பணியை மத்திய அரசு மேற்கொள்வதுதான் முறையாக இருக்குமென்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
அவ்வாறு மத்திய அரசு களப்பணியை மேற்கொள்ளும்போது கிடைக்கப்பெறும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கும், இயற்றும் சட்டங்களுக்கும் தான் சட்டரீதியான பாதுகாப்பு எப்போதும் இருக்கும். மாறாக, அந்தந்த மாநில அரசுகள் ஒரு சர்வே (Survey) என்ற பெயரில் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பது, பின்னர் அதன் அடிப்படையில் சட்டங்களை இயற்றுவது என்றால் அது பின்னொரு நாளில் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும் வாய்ப்புள்ளது.
எனவேதான், இந்தக் காரணங்களின் அடிப்படையில் ஏற்கெனவே தாமதப்படுத்தப்பட்டுள்ள தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மத்திய அரசு உடனடியாகத் தொடங்க வேண்டுமென்றும், அத்துடன் சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பையும் சேர்த்தே நடத்தவேண்டும் என்றும் இந்தப் பேரவை வாயிலாக தீர்மானத்தை நான் முன்மொழிய விரும்புகிறேன்" என்று கூறினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி தனித் தீர்மானம்:
"இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமையும், சம வாய்ப்பும் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் என்று இப்பேரவை கருதுகிறது.
எனவே 2021-ஆம் ஆண்டு மேற்கொண்டிருக்க வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டுமென்றும், அத்துடன் இம்முறை சாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்தவேண்டும் என்றும் மத்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இந்தத் தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும்" என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
தனித் தீர்மானம் குறித்து பல்வேறு கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்குப் பின்னர், சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு பேருந்துகளில் 50% காலாவதியானவை! போக்குவரத்துக் கழகம் அதிர்ச்சி தகவல்!