சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகளில் 6 கோடியே 23 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் முதல் முறை வாக்காளர்கள் மட்டும் 10 லட்சத்து 92 ஆயிரம் பேர். தேர்தல் பணிகளில் 3.32 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில், 874 ஆண்கள், 76 பெண்கள், கடந்த 2019 பொதுத் தேர்தலின் போது 72.47 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் இன்று கூடுதலாக வாக்குப்பதிவு நடக்க தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, காலை 6 மணி முதலே அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் அனைத்து வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் சீரான முறையில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024: லைவ் அப்டேட்!