சென்னை : தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்கிறார். அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப் 3) சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ வந்தடைந்தார். முதலமைச்சருக்கு சிகாகோவிற்கான துணைத் தூதர் சோம்நாத் கோஷ் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
சிகாகோ விமான நிலையத்தில், முதலமைச்சருக்கு, வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு (FETNA), தமிழ்நாடு அறக்கட்டளை, சிகாகோ தமிழ் சங்கம், மில்வாக்கி தமிழ் சங்கம், அறம் குழு, ப்ளூமிங்டன் தமிழ் சங்கம், அன்னை தமிழ் பள்ளி, மேடிசன் தமிழ் சங்கம் மற்றும் பியோரியா தமிழ் சங்கம் ஆகிய தமிழ்ச் சங்கங்களின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து சிகாகோ நகருக்கு வந்தடைந்தேன்.
— M.K.Stalin (@mkstalin) September 3, 2024
பேரன்பைப் பொழிந்து வரவேற்று நெகிழவைத்த தமிழ் உடன்பிறப்புகளுக்கு நன்றி! pic.twitter.com/KzoSpBtMXw
தமிழ்நாடு முதலமைச்சர் சிகாகோவில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கவுள்ளார். இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக, முதலமைச்சர் முன்னிலையில், சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.
இதன்மூலம் மொத்தம் 1300 கோடி ரூபாய் முதலீட்டில் 4600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : அமெரிக்கா சென்ற முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு.. முதல் நாள் திட்டம் என்ன? - MK STALIN AMERICA VISIT