சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த மார்ச் 6ஆம் தேதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பணம் கொண்டு வந்த நவீன், பெருமாள், சதீஷ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இது நெல்லை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான பணம் என தெரிவித்தனர். இதையடுத்து இந்த பணம் சென்னையில் பல்வேறு நபர்களிடமிருந்து கைமாறியதாக கூறப்பட்ட நிலையில், இதில் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் நேரில் அழைத்து தாம்பரம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொள்வதற்காக, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் வழக்கின் ஆவணங்களைப் பெற்றிருந்த நிலையில், பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் பணத்தைக் கொண்டு சென்றதாக கைது செய்யப்பட்ட சதீஷ், நவீன், பெருமாள் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரின் உதவியாளர்கள் ஆசைதம்பி, ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களிடம் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், பாஜக நிர்வாகி கோவர்தன் என்பவர் ஓட்டலில் வைத்து பணம் கைமாற்றப்பட்டதாக தெரிவித்ததன் அடிப்படையில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவர்தன் வீடு, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது ஹோட்டலில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் முடிவில் பணம் கைமாற்றப்படுவதற்கான முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியது. மேலும், விசாரணையில் கோவர்தனுக்குச் சொந்தமான ஓட்டலில் பணம் கைமாற்றப்பட்டு, அங்கிருந்து நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஓட்டலுக்கு கொண்டு செல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
அதன் அடிப்படையில், இந்த பணத்தை கோவர்தனின் கார் ஓட்டுநர் விக்னேஷ் என்பவர்தான் கொண்டு சென்றதாகவும் தகவல் வெளியாகியது. அதன் அடிப்படையில், கார் ஓட்டுநர் விக்னேஷிடம் மீண்டும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 10 பேர் உயிரிழந்த விவகாரம்..சிவகாசி பட்டாசு ஆலையின் நாக்பூர் உரிமம் ரத்து!