கரூர்: மேலப்பாளையம் கிராமத்தை அடுத்த வடக்குபாளையம் பகுதியில், சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு கவுன்சிலின் மாநில தலைமை அலுவலகம் திறப்பு விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம், மாநிலத் தலைவர் எம்.ஏ.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சிலின் தேசிய தலைவர் டி.எம்.ஓங்கர், மாநில தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து, புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் தமிழகம் முழுவதும் கிளைகளைத் துவக்கி, பொது மக்களுக்கும், அரசுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் பணியாற்றி வருகிறது. அரசின் திட்டங்கள், பொதுமக்களுக்கு உள்ள உரிமைகள் ஆகியவற்றை பெற்றுத் தருவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறது.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பது ஆகியவற்றிற்கு மக்கள் விழிப்புணர்வு அவசியம். இதற்காக, மக்களுக்கான சட்டப் பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்திட, சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் முனைப்பு காட்டி வருகிறது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "எங்களது நோக்கமே மக்களின் பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என்பது மட்டும்தான். சமூகத்தில் நிறைய பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளதற்கு காரணம், மக்களுக்கு அந்த பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என்பதை அறியாமல் இருப்பதுதான்.
மக்கள் பிரச்னைகளை எப்படி தீர்க்க வேண்டும் என்பதற்கு ஒரு ஜனநாயக ரீதியான அமைப்பு அவசியம் என்பதை உணர்த்துவதற்காக, தற்போது தமிழகத்தில் மாவட்டம்தோறும் கிளைகளை ஏற்படுத்தி வலுப்படுத்தும் வகையில், கரூரில் தலைமை இடமானது திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், பயிற்சி முடித்த நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன" எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது, சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு கவுன்சிலின் தேசிய நிர்வாகத் தலைவர் சந்தீப் ராஜ்வாடி, தென்மாநிலத் தலைவர் டி.நல்லதம்பி, கரூர் மாவட்டத் தலைவர் தனபால் உள்பட அமைப்பின் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் மீதும் லுக் அவுட் நோட்டீஸ்!