சென்னை: சென்னையில் கடந்த மாதம் 13 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது. உடனடியாக காவல்துறை அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சென்று பள்ளி வளாகம், அறைகள் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த பள்ளி மாணவர்களை பத்திரமாக அப்புறப்படுத்தினர். பின்னர் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து இமெயில் ஐடி குறித்து விவரங்கள் சேகரிக்கும் பணியில், சென்னை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளியில் தனியார் பள்ளிகளுக்கு இதேபோல் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதேபோல், நேற்றும் குரோம்பேட்டை பகுதியில் இயங்கி வரும் எம்ஐடி தொழில்நுட்பக் கல்லூரிக்கும் நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரின் இமெயில் ஐடி புரோட்டான் எனப்படும் நிறுவனத்தின் மெயில் ஐடி மூலமாக ஒரே நபர்தான் இந்த மிரட்டல்களை விடுத்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, சென்னை மத்திய சைபர் க்ரைம் போலீசார், இமெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபரின் விவரங்கள், ஐபி முகவரி கேட்டு சம்பந்தப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த புரோட்டான் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இந்த கடிதத்திற்கு எந்த பதிலும் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த இமெயில் சேவையை இந்தியாவில் முடக்க சென்னை போலீசார் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்று அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் மூலம் புரோட்டான் நிறுவனத்திற்கும் இமெயில் ஐடி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.
இதனையடுத்து புரோட்டான் நிறுவனம் தரப்பில், அந்த மிரட்டல் விடுத்த இமெயில் ஐடியின் தகவலை சென்னை போலீசாருக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில், இமெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபரின் ஐபி முகவரி, அவர் எங்கிருந்து இந்த இமெயில் அனுப்பினார் போன்ற விவரங்களைச் சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும் அந்த நபர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி நிர்வாகத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ஏதாவது வந்தால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் போர்வெல் பணி.. பரவிய புழுதியால் நோயாளிகள் அவதி!