ராமநாதபுரம்: தமிழ்நாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வருவது மண்டபம் பகுதியையும், ராமேஸ்வர தீவையும் இணைக்கும் பாம்பன் ரயில் பாலம். 1914ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட பாம்பன் ரயில் பாலம் தற்போது வரை பிரதானச் சின்னமாக மட்டுமல்லாமல், மிக முக்கிய போக்குவரத்து வழித்தடமாகவும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து, அதற்காக ரூ.545 கோடி செலவில், அதிநவீன கட்டமைப்புகளைக் கொண்ட புதிய ரயில் பாலத்தை அமைக்கும் பணிகள் தொடங்கி தற்போது முடிவுறும் நிலையில் உள்ளது. இந்த புதிய ரயில் பாலத்தின் நீளம் 2.08 கி.மீ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பாலத்தில் 333 தூண்கள், கடலுக்கு அடியில் 36 மீட்டர் ஆழத்தில் இருந்து அமைக்கப்பட்டிருக்கின்றன.
இதுமட்டுமல்லாது, கப்பல் செல்லும்போது பழைய பாம்பன் ரயில் பாலம் கதவு போல இரண்டாக திறந்து வழிவிடும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிய பாம்பன் ரயில் பாலம் லிப்ட் போன்று மேலே எழும்பும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிப்ட் வடிவிலான ரயில் தடம் மட்டும் 640 டன் எடை கொண்டதாகவும், சுமார் 17 மீட்டர் வரை உயர்ந்து செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர்த்து, பழைய பாம்பன் பாலத்தில் 10 கி.மீ. வேகத்தில் மட்டுமே ரயில்கள் பயணம் செய்ய முடியும். இதன் காரணமாக, சுமார் 15 நிமிடங்கள் வரை பயணம் செய்தால் மட்டுமே இந்த பாலத்தை கடக்க இயலும். ஆனால், தற்போது அமைக்கப்பட்டு வரும் புதிய பாம்பன் ரயில் பாலத்தில் 80 கி.மீ வேகம் வரையில் ரயில்கள் பயணம் செய்ய முடியும். இதனால் 2ல் இருந்து 3 நிமிடங்களுக்குள்ளாகவே பாலத்தைக் கடக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று (ஜூலை 26) இரவு பாம்பன் புதிய ரயில் பாலத்தின் நடுப்பகுதியான தூக்கு பாலம், வண்ணமயமான வாணவேடிக்கையுடன் இணைக்கப்பட்டது. மேலும், வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் ராமேஸ்வரம் - மண்டபம் இடையேயான ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் செய்திக்குறிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுமட்டும் அல்லாது, ஆரம்பத்தில் சிறிது நாட்களுக்கு புதிய ரயில் பாலத்தில் 10 கி.மீ வேகத்தில் மட்டுமே ரயில் இயக்கப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் மின்சார எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில் இயக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: இனி பெருங்களத்தூரில் டிராபிக் கிடையாது.. மேம்பாலம் பணிகளின் தற்போதைய நிலை என்ன?