திருச்சி: திருச்சி காவேரி ஆற்று மேம்பாலம் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய பயன்படுத்தும் இடமாகவும், அய்யாளம்மன் படித்துறை, அம்மா மண்டபம் படித்துறை குளிப்பதற்கும், பொழுதுபோக்கு இடமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில், சிந்தாமணி அருகே காவிரி ஆறு மற்றும் அதன் கரையோரப் பகுதியில் அடிக்கடி முதலைகள் நடமாட்டம் உள்ளதாக நீண்ட காலமாக வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தனர்.
இதனிடையே, கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் முதலைகள் ஆற்றின் மணல் திட்டுகளில் வந்து படுத்திருப்பதும், அதனை பொதுமக்கள் கண்டு அச்சமடைந்து தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பதும் தொடர்கதையாக இருந்து வந்தது. இதனிடையே, காவிரி ஆற்றின் தண்ணீரில் கரையோரம் வசிக்கக்கூடிய மக்கள் சிலர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதி மக்களுக்கு காவிரி ஆற்றில் குளிப்பதற்கும், துணி துவைக்கவும் இறங்கக்கூடாது என்று ஏற்கனவே வனத்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதற்கிடையே, நேற்று காவிரி ஆற்று மணல் திட்டில் முதலை படுத்திருப்பதை சிலர் பார்த்ததைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் காவிரி பாலத்தில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் ஏராளமானோர் அங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு முதலையை வேடிக்கைப் பார்க்க துவங்கினர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து வாகனங்களை யாரும் நிறுத்தக்கூடாது எனவும், பொதுமக்கள் இங்கே வேடிக்கை பார்க்கக்கூடாது எனக்கூறி அங்கிருந்து கலைந்து போக அறிவுறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை அதிகாரிகளும், வனத்துறை அதிகாரிகளும் வந்து முதலையைப் பிடிக்க முற்பட்டனர். அப்போது மீண்டும் தண்ணீருக்குள் ஓடியது. மேலும், டிரோன் கேமராக்கள் மூலம் முதலையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், மீண்டும் முதலை தென்பட்டால் தீயணைப்புத் துறைக்கும், வனத்துறைக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், முதலையைப் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீயணைப்புத்துறை, வனத்துறை அதிகாரிகளும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துச் சென்றனர். அத்துடன் அப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கட்டிங் மிஷினில் மறைத்து ஒரு கிலோ தங்கம் கடத்தல்! - Gold Seize in Trichy Airport