தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ள சுருளி அருவி மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் உள்ளது. இந்த அருவிக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் இருந்தும் பல்வேறு உள் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வருகை தந்து அருவியில் குளித்து விட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேலும், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது மட்டுமல்லாது, நேற்று (டிசம்பர் 12) இரவு சுருளி அருவி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக சுருளி ஆற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுருளி அருவியின் கீழ் பகுதியில் அமைந்துள்ள பூத நாராயணன் கோயில் வரை தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்வதால் பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (டிச.12) மாலை மற்றும் இரவு நேரத்தில் பெய்த கனமழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கனமழை எதிரொலி: டிசம்பர் 13 எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், அருவி பகுதிக்கு சென்று பார்க்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், கும்பக்கரை அருவியில் நீர் வரத்து குறைந்து சீராகும் வரை குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மெதுவாக தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன முதல் மிதமான மழை பெய்து வரும் காரணத்தால், இன்று (டிசம்பர் 13) தென் மாவட்டங்களில் அதி கனமழையும், வட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.