தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் உள்ள 18 சைவ ஆதீனங்களில், 800 ஆண்டுகள் பழமையானதும், சிவாக்கிர யோகியால் 13ஆம் நூற்றாண்டு காலத்தில் தொடங்கப்பட்டதில், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், சூர்யனார்கோயில் ஆதீனமும் ஒன்று. இந்த ஆதீனத்தின் 28-வது ஆதீனமான 54 வயதாகும் ஸ்ரீ மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள் கர்நாடகா மாநிலம் ராமநகரா பகுதியில், 47 வயதாகும் ஹேமாஸ்ரீ என்ற பெண்ணை கடந்த அக்டோபர் 10ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தற்போது அதற்கு சான்றாக இவர்களின் பதிவு திருமணச் சான்றிதழ் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தான் இதை மறைக்கவில்லை எனவும், எனக்கு முன்பு பட்டத்திலிருந்த 27வது குருமகா சன்னிதானமான ஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சாரியசுவாமி திருமணம் செய்து கொண்டு ஆதீனமாக தொடர்ந்தவர் தான் என்றும், இந்த ஆதீனத்தில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் திருமணம் செய்து கொண்டவர்கள் தான் என்றும், ஆதீன பைலாவில் ஆதீனகர்த்தர் திருமணம் செய்து கொள்ள கூடாது என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என தன்னிலை விளக்கமளித்துள்ளார்.
தற்போது இதுதொடர்பாக சூரியனார்கோயில் ஆதினம் தன்னிலை விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கர்நாடகாவில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி ஹேமாஸ்ரீ (47) என்பவரைப் பதிவு திருமணம் செய்து கொண்டது உண்மை தான் என்றும். சூரியனார்கோயில் ஆதீனம் என்பது சிவாச்சாரியார் மடம் என்பதால், ஏற்கனவே திருமணமானவர்கள் இங்கே ஆதீனமாக 10க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர்.
கர்நாடகாவில் இதுவரை சைவ மடங்கள் இல்லாத நிலையில் அங்கு, சிவாக்கிர யோகிகள் மடம் தொடங்குவதற்காக விருப்பம் கொண்டு இடம் வழங்கிய கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ என்ற பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டுள்ளேன். பிடரி நகரில் மடம் தொடங்க அவர் இடம் தந்துள்ளார். அங்கு நிர்வாகம் செய்ய டிரஸ்டியாக நியமனம் செய்ய ஏதுவாக அவரை வெளிப்படையாக அறிவித்துப் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நான் எதையும் மறைக்கவில்லை. சூரியனார்கோயில் ஆதீனம் மடத்தில் அவர் பக்தராக மட்டும் வந்து செல்வார் எனவும், தொடர்ந்து சூரியனார்கோயில் ஆதீனத்தில் நான் பொறுப்பேற்ற பிறகு ரூ.1 கோடியே 40 லட்சம் செலவில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொண்டு சைவ, சமயப் பணிகள் பக்தர்களின் பங்களிப்போடு செயல்படுத்தியுள்ளதாகவும்" தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.