டெல்லி : மதுரையில் லஞ்சப் புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில் விசாரணையை வெள்ளிக்கிழமை வரை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம், முன்னாள் டிஜிபி அல்லது ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மாநில லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு இந்த வழக்கின் அடுத்க கட்ட விசாரணை மேற்கொள்ள பரிந்துரைத்து உள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க 20 லட்ச ரூபாய் லஞ்சம் பெற முயன்ற போது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கைது செய்தனர்.
அதன் பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்தியச் சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். இந்த சூழலில், அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் முறைகேட்டு புகாரில் அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
மேலும், அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டது. இந்த வழக்கில் சிறையில் உள்ள அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் 4வது முறையாக நீட்டிக்கபப்ட்டு உள்ளது. காணொலி மூலம் அங்கித் திவாரி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரது காவலை பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டித்தது திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்தது. அதன்படி அங்கித் திவாரி தொடர்பான வழக்கைத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்ற உத்தரவிடக் கோரி மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, தமிழக காவல்துறை வழக்கு தொடர்பான முதல் தகவல்கள் அடங்கிய அறிக்கையை தர மறுப்பதாகவும், அரசு தரப்பில் அதிகாரிகள் தலையீட்டால் வழக்கு தொடர்பான தகவல்களை இணையத்தில் பதிவேற்றாமல் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில் மற்றும் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் ஆஜராகி, அமலாக்கத்துறை அதிகாரி வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று கூறினர். வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டி உள்ளதாகவும், புலனாய்வு அமைப்புகள் வழக்கு விசாரணையில் காழ்புணர்ச்சியை வெளிப்படுத்தாத வகையில் விசாரிக்க வேண்டும் என்றும் கூறினர்.
காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் கைது நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக் கூடாது என்றும் அவ்வாறு இருப்பின் அதை நீதிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அங்கித் திவாரி வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
வழக்கின் மீதான விசாரணையை வெள்ளிக்கிழமை வரை நிறுத்தி வைத்த நீதிபதிகள், வழக்கின் மீதான அடுத்த கட்ட விசாரணையை மாநில லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு, அந்த குழுவை நிர்வகிக்க முன்னாள் டிஜிபி அல்லது உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதுபதி ஆகியோரை நியமிக்கலாம் என பரிந்துரை செய்தனர்.
இதையும் படிங்க : முல்லை பெரியாற்றில் புதிய அணை - கேரள அரசு திட்டவட்டம்! தமிழக அரசின் நடவடிக்கை என்ன?