ஈரோடு: தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று (மார்ச் 12) காலை தாளவாடி மலைப்பகுதியிலிருந்து கரும்பு ஏற்றி வந்த லாரி சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு செல்வதற்காக திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. 27வது கொண்டை ஊசி வளைவு அருகே லாரி சென்று கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சென்று கொண்டிருந்த கார் மீது கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனை அடுத்து, அவ்வழியே சென்ற வாகன ஓட்டுநர்கள் மற்றும் போலீசார் உதவியுடன் காரில் சிக்கிய ஆறு பேரை மீட்டனர். மேலும், காரின் இடிபாடுகளிடையே சிக்கிய 3 பேர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தது கஞ்சநாயக்கனூரைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 50), சென்னையன் (55), நம்பியூரைச் சேர்ந்த குமார் என்பது தெரிய வந்தது.
இந்த விபத்து காரணமாக, திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சுமார் 6 மணி நேரத்துக்குப் பின், தற்போது கிரேன் மூலம் விபத்துக்குள்ளான கார் மற்றும் லாரி அப்புறப்படுத்தப்பட்டதால், இயல்பு நிலை திரும்பியுள்ளது. திம்பம் மலைப் பாதையில் கரும்பு ஏற்றிச் சென்ற லாரி கார் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள் மீது உரசிய லாரி.. 4 பேர் உயிரிழந்த சோகம்