கோயம்புத்தூர்: கவுண்டம்பாளையம் அருகே கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஷா குழுமத்தை சேர்ந்த கிறிஸ்டல் நிறுவனத்தின் தேயிலை குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கு ஊட்டி, கொடைக்கானல் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு தேயிலை தோட்டங்களில் இருந்து நேரடியாக தேயிலை கொள்முதல் செய்யப்பட்டு, அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு 9.30 மணி அளவில் திடீரென தீ பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது. குடோனில் வைக்கப்பட்டிருந்த தேயிலை பொருட்களில் தீ பற்றியதால் மளமளவென குடோன் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இதையும் படிங்க: ஈரோட்டில் குடிபோதையில் காவலர்களை தாக்கிய இருவர்.. நடுரோட்டில் நடந்த ரகளை!
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் தேயிலை ஏற்றுமதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான டீத்தூள் எரிந்து சாம்பலானதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது பட்டாசு வெடித்ததில் ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் இந்த சம்பவம் நடைபெற்றதா? என்பது குறித்து கவுண்டம்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீபாவளி விடுமுறை காரணமாக தேயிலை குடோனில் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.