தஞ்சாவூர்: தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் தன்னாட்சி இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் கௌரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். தற்போது இக்கல்லூரியின் முதல்வராக மாதவி பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 18ஆம் தேதி தமிழ்த்துறை முதுகலை 2ஆம் ஆண்டு வகுப்பில் பாடம் எடுத்த தமிழ்த்துறை உதவி பேராசிரியை, மாணவ மாணவிகள் இடையே சாதிய மோதலை உருவாக்கும் வகையிலும், சாதிப்பெயரைக் குறிப்பிட்டு அவமதித்து பேசியதாகவும், மாணவியர்களை இழிவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும், இவரிடம் பயிலும் ஆராய்ச்சி மாணவர்களிடம் தனது சொந்த வேலைகளைச் செய்யச் சொல்வதாகவும், ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பணம் பெற்றுக் கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகள் தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் கல்லூரி முதல்வர் மாதவியிடம் புகார் அளித்தும், கடந்த ஒரு மாத காலமாக இதற்கு தீர்வு காண எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், பிரச்னைக்குரிய பேராசிரியை மற்றும் கல்லூரி முதல்வர் மாதவி இருவரும் நெருங்கிய தோழிகள் என்பதால், பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்காமல் முதல்வர் அமைதி காத்து வருகிறார் என்றும், இவர்கள் இருவருக்கும் ஆதரவாக வேதியியல் துறைத் தலைவர் மீனாட்சி சுந்தரம் என்பவர் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஆகவே, அவர்கள் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களை வேறு கல்லூரிகளுக்கு பணியிட மாற்றம் செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் நேற்று (ஆக.12) தங்கள் வகுப்புகளை புறக்கணித்ததுடன், கல்லூரி வாயில் முன்பு திரண்டு கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று (ஆக.13) தமிழ்த்துறை மாணவ, மாணவிகள் அனைவரும், கல்லூரி முதல்வர் மாதவி அறை முன்பு ஒன்று திரண்டு முற்றுகையிட்டு, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுமட்டுமல்லாது, மாணவர்கள் மற்றும் பேராசிரியை இடையிலான பிரச்னையை இனியும் காலம் தாழ்த்தாது விரைந்து தீர்வு கண்டு, மாணவர்களின் கல்வி பாதிக்காமல் காக்க வேண்டும் என்று மாணவர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: பொறியியல் கலந்தாய்வு; 63 ஆயிரம் மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு!