கோயம்புத்தூர்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய். பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இவர், குஞ்சபனை அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். 12ம் வகுப்பில் 600க்கு 489 மதிப்பெண் பெற்றுள்ள இவர் அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் கோவை உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபி படிக்க தேர்வாகி இருக்கிறார்.
இதன் பின்னர் கல்லூரிக்குச் சென்றபோது இரண்டு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தினால் மட்டுமே கல்லூரியில் சேர முடியும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் கூறியதாக தெரிகிறது.ஆனால் 30,000 ரூபாய் மட்டுமே கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ தனது தந்தையை அழைத்துக் கொண்டு நேற்று கோவை மாவட்ட ஆட்சியின் நேர்முக உதவியாளரிடம் (பொது) புகார் மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று மீண்டும் மாணவனை அழைத்து கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உலகின் 2வது நீளமான மெரினா கடற்கரை பெறப்போகும் நீலக்கொடி சான்றிதழ்! அப்படியென்றால் என்ன?
ஒரு வருட படிப்பு போய்விட்டது: இது குறித்து மாணவன் சஞ்சய் கூறுகையில், "கல்லூரிக்கு சென்றவுடன் முதலில் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கேட்டார்கள். அவ்வளவு ரூபாய் கட்ட முடியாது என்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தோம். பிறகு இன்று கல்லூரியிலிருந்து அழைத்து, 'ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும்.
அதில் 45 ஆயிரம் ரூபாய் உதவித்தொகைப் போக மீதம் உள்ள பணத்தை கட்ட வேண்டும்' எனக் கூறினர். அவ்வளவு பணத்தை தங்களால் கட்ட முடியாது. என்னை போன்று ஆன்லைன் கலந்தாய்வில் மூலமாகச் சென்ற அதிகமானோர் சிரமப்பட்டு வருகிறார்கள். மருத்துவ படிப்புகள் உள்ளிட்ட அவர்களுக்கு தருவது போல் 7.5% இட ஒதுக்கீடு பாராமெடிக்கல் படிப்பிற்கும் தந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது எனக்கு ஒரு வருட படிப்பு போய்விட்டது. எனவே அடுத்த வருடம் தான் படிப்பில் சேர வேண்டும் இதற்கான உரிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்:இது குறித்து பேசிய மாணவனின் தந்தை ராஜு கூறுகையில்,"என் மகனுக்கு வந்த நிலமை வேறு எந்த குழந்தைகளுக்கும் வரக்கூடாது.அரசு நடவடிக்கை எடுத்து மருத்துவ கல்லூரியில்,ஆதிவாசி மக்களான எங்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தந்து மேற்படிப்பு தொடர்வதற்கு வழி வகுக்க வேண்டும். என் மகன் அரசு இட ஒதுக்கீட்டில் தேர்வாகி வந்துள்ளான். சுயநிதி மூலம் வரவில்லை எனவே அரசு நிர்ணயித்த தொகையை விட அதிகமாக கேட்பதால், அந்த கல்லூரியில் என் மகனை படிக்க வைக்க முடியாத சூழல் உள்ளது" என தெரிவித்தார்.
நிர்வாகத்தினர் பதில்: இதுகுறித்து சம்பந்தபட்ட தனியார் கல்லூரியில் பிசியோதெரபி பிரிவு முதல்வர் கார்த்திகேயனை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கூறியதாவது,"மாணவர் சஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்த நிலையில் மாணவரை அழைத்து அவருக்கு தேவையான சலுகைகள் கிடைப்பது குறித்து நிர்வாகத்திடம் பேசப்பட்டுள்ளதாக" தெரிவித்தார்.