சென்னை: சென்னையில் வீட்டில் வளர்க்கும் நாய் முதல் தெரு நாய்கள் வரை நடந்து செல்பவர்களைக் கடிக்கும் சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சி பூங்காவில் இரண்டு ராட்வீலர் நாய் கடித்து ஐந்து வயது சிறுமி பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதேபோல், ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் நேற்று (மே 9) காலை காவலர் குடியிருப்பில் உள்ள நாய் ஒன்று கடித்து ஐந்து வயது சிறுவன் பலத்த காயமடைந்த சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக, சென்னை சூளைமேடு சர்புதீன் தெருவில் வசிக்கும் சுரேஷ் - நீலா என்ற தம்பதி, கடைக்குச் சென்று கொண்டிருந்தபோது நீலாவை அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் கடிக்க துரத்தியுள்ளது.
இந்த நிலையில், நீலாவை துரத்திய தெரு நாய்கள், நீலாவின் தொடைப் பகுதியில் கடித்துள்ளது. அப்போது, நீலாவைக் காப்பாற்ற வந்த சுரேஷையும் தெரு நாய்கள் கடித்து குதறியதால் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனை அடுத்து, இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
இந்தச் சூழலில், சுரேஷ் - நீலா என்ற தம்பதியரைக் கடித்த தெரு நாய்கள் உள்ள பகுதியில் வசிக்கும் மல்லிகா என்ற பெண், அந்த நாய்களுக்கு உணவளித்து பராமரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், தற்போது அந்த பெண்ணின் மீது சுரேஷ் - நீலா தம்பதி, சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த தம்பதியர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், இந்தச் சம்பவம் தொடர்பாக சூளைமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சூளைமேடு பகுதி முழுவதும் தெரு நாய்கள் அதிகரித்து பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், தெரு நாய்களைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 23 வகையான நாய்களுக்கு உடனே கருத்தடை செய்க; தமிழக அரசு அதிரடி உத்தரவு!