கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள ஜி.ஆர்.நகர் பகுதியில் வசித்து வருபவர் மனோகரன் (60). இவர் புலியூர் செட்டிநாடு சிமெண்ட் ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துணை மேலாளர். தனது பணி ஓய்வுக்குப் பிறகு குடும்பத் தேவைக்காகவும், தொழில் மேற்கொள்ளவும், கடந்த 2022ஆம் ஆண்டு, ரூபாய் 23 லட்சம் வீட்டு அடமானக் கடனாக பைனான்சியர் ரகுநாதன் என்பவரிடம் கடன் பெற்றுள்ளார்.
கடனுக்காக பத்திரப்பதிவு அலுவலகத்தில் அடமானப் பத்திரம் பதிவதாகக் கூறி பெறப்பட்ட பத்திரப்பதிவில், மோசடி செய்து வீட்டினை பைனான்ஸ் அதிபர் ரகுநாதன் தனது பெயருக்கு மாற்றம் செய்து கையகப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கரூர் உரிமையியல் நீதிமன்றத்தில் மனோகரன் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று உள்ளது. இந்நிலையில், இன்று (ஏப்.27) மதியம் 1 மணி அளவில் 10க்கும் மேற்பட்ட ரவுடிகள், காந்திகிராமம் பகுதியில் உள்ள மனோகரன் வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பின்னர், இது தொடர்பாக காவல்துறைக்கு மனோகரன் குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், தகவல் தெரிவித்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் ஆகியும் கரூர் பசுபதிபாளையம் பகுதியில் இருந்து காவலர்கள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என மனோகரன் குற்றம் சாட்டியுள்ளார். 3 மணிக்கு மேல் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் என்பவர் மட்டும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல், காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்குமாறு கூறிவிட்டுச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக மனோகரன் கூறுகையில், "எனது குடும்பத்தினர் மீது பட்டப்பகலில் ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்துவதற்காக திட்டமிட்டு, பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். இதனைத் தடுக்க முற்பட்ட போது, திடீரென ரவுடிகள் கல் வீசி தாக்குதல் மேற்கொண்டனர். அதேபோல், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் ரவுடிகள் தப்பி ஓடினர்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்குப் பதிலாக பைனான்ஸியருக்கு துணையாக செயல்படுகிறது. கடன் தொகையை அசலும், வட்டியுமாக செலுத்த தயாராக இருந்தும், அவரது பெயருக்கு வீட்டுப் பத்திரத்தை மாற்றி வைத்துக் கொண்டு, தனது சொத்தை அபகரிக்க பைனான்ஸியர் ரகுநாதன் முயற்சி செய்து வருகிறார்.
மேலும், தனக்கும், தனது குடும்பத்தினரின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே, ரவுடிகளுக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.