செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் புகழ் பெற்ற அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு 170 வகைகளைச் சேர்ந்த 1977 வனவிலங்குகள் பல வகையான பறவைகள் போன்றவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு விஜய் (வயது 23) என்பவர் தற்காலிக பணியாளராக வேலை செய்து வருகிறார்.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வளாகத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வேலை செய்து வரும் இவர், கடந்த மூன்று மாதங்களாக சதுப்புநில முதலை பண்ணையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது பண்ணையில் முதலைகள் எண்ணிக்கை அதிகளவில் இருந்ததால், முதலைகளை மாற்று இடத்தில் விடுவதற்காக விஜய் ஒரு முதலையை பிடித்ததாக கூறப்படுகிறது.
இதில் எதிர்பாராத விதமாக முதலை விஜயின் காலில் கடித்ததில் பலத்த காயமடைந்தார். இதனை கண்ட சக ஊழியர்கள் விஜயை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இது குறித்து பூங்கா அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இதே பூங்காவில் விஜயின் தந்தை ஏசு, நெருப்பு கோழி பராமரிப்பாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை நடைபாதை ஆக்கிரமிப்புக்களை அகற்றக் கோரிய மனு; தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு! - Remove Pavement Encroachment