இராமநாதபுரம்: இராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நான்கு நாட்டுப் படகு மற்றும் அதிலிருந்த 30க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்தனர்.
மேலும், அவர்களை விசாரணைக்காக இலங்கைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ளது, தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, கடந்த 6ஆம் தேதி தூத்துக்குடி அடுத்து தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்கள் மற்றும் அவர்கள் மீன் பிடிக்கச் சென்ற படுகள் உள்ளிட்டவற்றை மீட்க வேண்டி அவர்களது உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
முன்னதாக, தூத்துக்குடி அடுத்த தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா (45), என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 12 மீனவர்கள் மற்றும் வேறொரு படகில் அதே பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது, இலங்கை மன்னார் தென் கடல் பகுதியில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 22 தமிழக மீனவர்களையும், இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
பின்னர், அவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர், புத்தளம் மாவட்டம் கல்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், அவர்கள் இம்மாதம் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து அவர்கள் வாரியாபொல சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சிறை பிடிக்கப்பட்ட அந்தோணி மகாராஜாவின் மனைவி ஜான்சி ராணி கூறுகையில், "எனது கணவரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து 5 நாட்கள் கடந்துவிட்டன. அவர்களை மீட்க கோரி ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்துள்ளோம்.
தற்போது மீண்டும் அனைவரும் வந்து எங்கள் உறவினர்கள் மற்றும் படகுகளை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடத்தில் கோரிக்கை வைத்துள்ளோம். எங்கள் குடும்பத்தினர் சிறை பிடிக்கப்பட்டுள்ளதால், எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது" என கண்ணீர் மல்க கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "தமிழக மீனவர்களை நாட்டின் குடிமக்களாக மத்திய அரசு கருதுகிறதா?"- நாடாளுமன்றத்தில் துரை வைகோ சரமாரி கேள்வி!