சேலம்: உணவு என்பது மக்களின் அன்றாட அடிப்படை தேவைகளில் ஒன்று. ஒரு உணவு பசியை போக்குவதற்கு மட்டும் இல்லை, அது அந்த ஊரின், மக்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் எடுத்துரைக்கிறது என்றே கூறலாம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான உணவுத் திருவிழா தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் நடந்து வருகிறது.
கோவை, திருவண்ணாமலையில் நடந்த உணவுத் திருவிழா போன்றே, தற்போது சேலத்திலும் உணவுத் திருவிழா நடைபெறுகிறது. ஆனால், ஒரு சிறிய மாற்றமாக இந்திய உணவு இல்லாமல், இலங்கை உணவு வகையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உள்ள பாரம்பரிய உணவுகளை இந்தியாவில் கொண்டு சேர்க்கும் விதமாக, சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இலங்கை உணவுத் திருவிழா தொடங்கியது. நேற்று கோலகலமாகத் தொடங்கிய இந்த மாபெரும் உணவுத் திருவிழா, வரும் 26ஆம் தேதி வரை சுமார் 10 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற சமையல் கலை வல்லுநர்களைக் கொண்டு கடல் உணவுகள், ஜாஃப்னா மட்டன் பிரியாணி, சிக்கன் பெப்பர் ஸ்டூ, மட்டன் பிளாக் கறி, மீன் அம்புல், தியால் கோக்கனட் ஹெப்பர்ஸ் போன்ற பாரம்பரிய அசைவ உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக சமைக்கப்பட்டு வழங்கப்படும். சைவ உணவு வகைகள், தேங்காய் பால், கருப்பட்டி உள்ளிட்ட இயற்கை சுவை கொண்ட பொருட்களின் இனிப்பு வகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
தற்போது இந்த உணவுத் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பாரம்பரிய இலங்கை உணவை சுவைத்து மகிழ்ந்தனர். மேலும், பாரம்பரிய இலங்கை அலங்காரங்கள் மற்றும் அங்கு பயன்படுத்தப்படும் பாரம்பரிய உடைகளைக் கொண்டு உணவு வகைகள் காட்சிப்படுத்தியிருந்தது. இந்த உணவுத் திருவிழா உணவுப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருவண்ணாமலை இயற்கை உணவு திருவிழா.. ஆர்வமுடன் பங்கேற்ற பொது மக்கள்!