சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஜன.19 ஆம் தேதி அன்று 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் - 2023 தொடரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி கடந்த ஜனவரி 19 முதல் 31 வரை நடைபெற்றது.
இதில், 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 18 வயதுக்குட்பட்ட 5 ஆயிரத்து 500 விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர். மேலும், இப்போட்டியில் பயிற்சியாளர்கள், நடுவர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், கேலோ இந்தியா போட்டி நேற்று (ஜன.31) முடிவடைந்தையொட்டி, மகாராஷ்டிரா மாநிலம் 150 பதக்கங்களைப் பெற்று முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும், ஹரியானா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த நிறைவு விழாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் கலந்து கொண்டார்.
பின்னர், பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர், "பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவிற்காக 11 நாட்கள் விரதம் மேற்கொண்டிருந்த நிலையிலும், இந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்தார்.
தமிழ்நாட்டில் தற்போது நிறைவடைந்துள்ள கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 4 ஆயிரத்து 454 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் மகளிரின் பங்களிப்பு கிட்டதட்ட சரிசமமாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மகாராஷ்டிரா, இரண்டாம் இடம் பெற்ற தமிழ்நாடு, மூன்றாம் இடம் பெற்ற ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு வாழ்த்துக்கள்.
தமிழ்நாடு 98 பதக்கங்களைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் புதிய தேசிய சாதனைகளைப் படைத்த வீரர்களுக்கு பாராட்டுக்கள். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் சாதனைப் படைத்த பெரும்பாலானவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த எளிய குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள்.
இது போன்ற வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாதனைகளைப் படைக்க கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் சிறந்த களமாக அமைந்துள்ளது. இது போன்ற வீரர்களுக்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தொடர்ந்து உதவிகளை வழங்கி ஊக்குவிக்கும்.
இளம் வீரர்கள் தான் இந்திய விளையாட்டுத்துறையின் எதிர்காலம். விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் சகஜம். வீரர்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் விருந்தோம்பல் சிறப்பாக அமைந்தது" எனப் பாராட்டினார்.
அதன்பின் பேசிய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்திய ஒன்றியத்தின் விளையாட்டு துறையின் தலைநகர் என்ற நிலையை அடைவதற்கு தமிழ்நாட்டிற்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது என்பதற்கு இந்த போட்டிகள் மீண்டும் நிரூபித்திருக்கிறது.
விளையாட்டு என்பதை ஒரு இயக்கமாகவே நம்முடைய தமிழ்நாடு அரசு மாற்றி வருகிறது. அதிலும் குறிப்பாக விளையாட்டு துறையின் சாதனையாளர்கள் நகரத்தில் இருந்து மட்டுமல்ல கிராமத்தில் இருந்தும் வரவேண்டும். குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பணக்கார வீட்டு பிள்ளைகள் மட்டுமல்ல, எல்லோரும் வர வேண்டும்.
விளையாட்டில் வெல்ல வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் எண்ணம். அந்த வகையில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் (Kalaignar Sports Kit) திட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நம்முடைய அரசு துவக்க இருக்கிறது.
திருச்சியில் வரும் 7ஆம் தேதி இந்த திட்டத்தை நான் துவக்கி வைக்கின்றேன். எப்படி படிப்பதற்கு புத்தகங்களை நமது அரசு கொடுக்கின்றதோ, அதேபோல விளையாட்டு போட்டிகளில் இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என்றும் விளையாட்டு உபகரணங்களையும் நாம் கொடுக்க இருக்கின்றோம். அதுவும் விளையாட்டை எப்போதும் நேசித்த கலைஞருடைய நூற்றாண்டில் கலைஞரின் பெயரிலேயே கொடுக்க உள்ளோம்.
வெற்றியாளர்களுக்கு பதக்கமும், விருதுகளும் ஒரு அங்கீகாரம் என்றால் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு இந்த அனுபவம் தான் பதக்கம். எனவே உங்களுக்கும் என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டிருக்கலாம். ஆனால் உங்களுக்கான களம் அப்படியேதான் இருக்கிறது.
உங்கள் திறமைக்கான அங்கீகாரம் வெகுதொலைவில் இல்லை. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 சர்வதேச அளவில் சாதிக்க, அவர்களுடைய திறமையை மேன்மேலும் வளர்த்தெடுத்து அவர்களை வெற்றியாளர்களாக்கிட இந்த அரசு அயராது உழைக்கும். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நம்முடைய வீரர்களுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும்" எனத் தெரிவித்தார்.
தமிழகம் இரண்டாவது இடம்: இந்த கேலோ இந்தியா தொடரில் தமிழகத்தில் இருந்து 266 வீரர்கள் மற்றும் 256 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் தமிழகம் 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என 98 பதக்கங்களைப் பெற்று 2வது இடத்தில் உள்ளது. கடந்த வருடம் 8வது இடத்தில் இருந்த தமிழகம் இம்முறை 2வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகானின் மேல்முறையீடு மனுவிற்கு உயர்நீதிமன்றம் மறுப்பு!