சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக கட்சியின் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவினுடைய புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். நமது ஈ டிவி பாரத் செய்தியாளர் ஹுசைன் நினைவிடத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டபோது, செல்லும் வழியெல்லாம் ஜெயலலிதாவினுடைய புகைப்படத்திற்கு மாலை அணிவித்து வைத்திருப்பது பார்க்க முடிந்தது.
அதேபோல் காதுகளில் எம்.ஜி.ஆர் பாடல்கள் கேட்க முடிந்தது. மேலும், சாலைகள் முழுவதும் அதிமுக கட்சியின் கொடிகளாகவும், அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களின் ஜெயலலிதா நினைவுநாள் சுவரொட்டிகளும் தென்பட்டன.
இறுதியாக மெரினாவை சென்றடைந்த போது ஜெயலலிதா நினைவிடம் நுழைவு வாயிலில், சிறு வியாபாரி ஒருவர் அதிமுக கட்சியின் மூத்த தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது புகைப்படங்களோடு, எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களான சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரது புகைப்படங்கள் விற்கப்படுவதை காணமுடிந்ததுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக கட்சியை ராணுவகட்டுப்பாடுடன் வழிநடத்திய ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சி பல்வேறு துண்டுகளாக பிரிந்துள்ள நிலையில், ஜெயலலிதாவின் நினைவிடத்திலும் எடப்பாடி, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக மரியாதை செலுத்தியதை பார்க்க முடிந்ததுள்ளது.
இதையும் படிங்க: 'அதிமுகவுக்கு முடிவுரை எழுதுவார் ஈபிஎஸ்'... ஓபிஎஸ் - டிடிவி தனித்தனியே சூளுரை..!
இதுகுறித்து அதிமுக தொண்டர் பாலன் என்பவரிடம் பேச்சுக்கொடுக்க துவங்கினோம். அப்போது நம்மிடம் பேசிய அவர், "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் அதிமுகவை வெற்றி முகத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அதன் பிறகு வந்தவர்கள் ஒற்றுமை இல்லாததால் பல்வேறு வகையில் பிரிந்து சென்றுவிட்டார்கள். லட்சக்கணக்கான தொண்டர்களின் எதிர்பார்ப்பு அனைவரும் ஒற்றுமையாகி 2026 தேர்தலில் அதிமுக-வை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்பதே. இல்லையென்றால் திமுக தான் ஆட்சியை பிடிக்கும்.
தனிப்பட்ட காரணங்களுக்காக பிரிந்து சென்றவர்கள் அதை மறந்து ஒன்றிணைய வேண்டும். தலைவர்கள் பிரிந்து இருந்தாலும் இரட்டை இலை எங்கு இருக்கோ அங்கு வாக்களிக்க தொண்டர்கள் தயாராக உள்ளோம்" என்றார்.
அதனை அடுத்து விஜய் என்ற தொண்டரிடம் கேட்டபோது, "ஜெயலலிதாவினுடைய பணியால் ஈர்க்கப்பட்டு அதிமுக-வில் இணைந்தேன். ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு பிரிவுகளாக உள்ளனர் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் கட்சியை ஒருங்கிணைக்க முடியும். இல்லையென்றால் சாதிய ரீதியாலான கட்சி போல் ஆகிவிடும். எனவே, அனைவரும் ஈகோவை மறந்து ஒன்றிணைய வேண்டும். சாதாரண தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டுமென கருதினாலும், அதனை தலைவர்கள் நினைத்தால் மட்டுமே முடிக்க முடியும்" என்றார்.
ஒன்றிணைவது குறித்து ஜெயலலிதா நினைவிடத்தில் பேசிய டிடிவி தினகரன், "ஒரு சிலரின் பதவி வெறியால் ஜெயலலிதா தொண்டர்கள் ஒன்றிணைவதில் காலதாமதம் ஏற்படுகிறது" என்று தெரிவித்திருந்தார்.