வேலூர்: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள ராஜகுப்பம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து தற்பொழுது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் கோபிநாத் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியிருக்கிறார். வரும் செப்டம்பர் 5ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரிடம் இருந்து விருதையும், வெகுமதியையும் பெறுகிறார் ஆசிரியர் கோபிநாத்.
இவர், பாடங்களுக்கேற்ற இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் வடிவம் கொடுத்து கல்வியையும், கலையையும் ஒருசேர வளரும் தலைமுறைகளிடம் கொண்டு சேர்க்கிறார். இதுமட்டுமல்லாது, ஏற்றத்தாழ்வுகளைக் களைய அரசுப் பள்ளி மாணவர்களைப் போல் தானும் சீருடை அணிந்து வகுப்பிற்குச் செல்வது, மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்க திருவள்ளுவர், பாரதியார், ஒளவையார் வேடங்களில் சென்று பாடங்கள் எடுப்பது இவரது தனிச்சிறப்பு.
மேலும், 'தெருவிளக்கு கோபிநாத்' என்பதுதான் இவரது மற்றொரு அடையாளமாக இருக்கிறது. இதற்கு காரணம், இவர் அன்றாட வாழ்க்கையில் கூலி வேலைக்குச் செல்பவர்களும் மாலை நேரத்தில் கல்வி பெறும் வகையில் 'தெருவிளக்கு' என்ற இரவுப் பள்ளியை நடத்தி வருகிறார். இதில் கிட்டத்தட்ட 80 பேர் வரையிலும் கல்வி பயின்று வருகின்றனர்.
இதனைத் தவிர்த்து, பொம்மலாட்டம் நிகழ்ச்சி மூலம் பெண்கல்வி, குழந்தைத் திருமணம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மாணவர்களுக்கு நடத்தி வருகிறார். இவ்வாறு வளரும் தலைமுறைக்கான ஆசிரியராக சிறந்து விளங்கும் கோபிநாத்துக்கு, தேசிய நல்லாசிரியர் விருது என்ற மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது என சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உறவினர்கள் இதை பெரிதும் கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து ஆசிரியர் கோபிநாத் கூறும்போது, "ஒரு ஆசிரியரின் உயர்ந்த விருது என்னவென்றால், அது குடியரசுத் தலைவரிடம் பெறும் தேசிய நல்லாசிரியர் விருதுதான். அத்தகைய, தேசிய நல்லாசிரியர் விருது எனக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது மாணவர்களும், அவர்களின் கற்றலுக்காக நான் செய்த பணிகளுமே இந்த விருதுக்கு என்னை தகுதியானவனாக மாற்றியதற்கு முக்கிய காரணம்.
பொதுவாக சீருடை என்பது மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளைப் போக்கவே அரசு கொண்டுவந்தது. அதன் அடிப்படையில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஏற்படும் இடைவெளியை குறைக்க வேண்டும் என்பதற்காகவே மாணவர்களைப் போலவே நானும் சீருடை அணிந்து பள்ளிக்கு வருகிறேன். மேலும், என்னுடைய பணிக்காலம் முடியும் வரை நான் பள்ளிச் சீருடையிலேயே தான் வருவேன்.
அது மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு பல்வேறு கலைகள் மூலமாக கல்வியை அளித்து வருகிறேன். குறிப்பாக, வில்லுப்பாட்டு, நாடகங்கள், ஓவியங்கள் மூலமாக மாணவர்களுக்கு கல்வியை கற்றுத் தருகிறேன். மாணவர்கள் இனிமையாகவும், எளிமையாகவும் கல்வி கற்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். அந்த வகையில், என்னுடைய வகுப்பறை தொழில்நுட்பமும், கிராமிய கலைகளும் நிறைந்து காணப்படும்.
திருவள்ளுவர், அவ்வையார், பாரதியார் உள்ளிட்ட பல்வேறு புலவர்கள் மற்றும் சங்க கால மன்னர்களைப் போல வேடங்களை அணிந்து, மாணவர்களுக்கு இலக்கியங்கள் உள்ளிட்ட பாடங்கள் எளிதாக புரியும் வகையில் கற்பித்தலை மேற்கொண்டு வருகிறேன். இதனால் மாணவர்கள், தனது வாழ்நாள் முழுவதும் இந்த பாடங்களை மறக்கமாட்டார்கள். வருங்காலத்தில் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறேன்" என்று மகிழ்ச்சிபட தெரிவித்தார்.
கோபிநாத்தின் மனைவியும், அரசுப் பள்ளி ஆசிரியருமான வெங்கடேஸ்வரி கூறுகையில், "எனது கணவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. கலை வடிவில் மாணவர்களுக்கு கல்வியைக் கற்பித்து, மாணவர்களை கல்வியிலும் கலையிலும் வெற்றியடை செய்யவேண்டும் என்பதே அவரது நோக்கம். அவரது நோக்கம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள் மற்றும் இதனை அவர் தொடர்ந்து செய்யவேண்டும்" என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் இது குறித்து கோபிநாத்துடன் பணியாற்றும் சக ஆசிரியர் பிரியா தெரிவிக்கையில், "இந்த ஆண்டு எங்கள் பள்ளியின் ஆசிரியர் கோபிநாத், தேசிய நல்லாசிரியர் விருது பெறுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதனால் வேலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகமே மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
கோபிநாத் எந்த ஒரு பணியைச் செய்தாலும் முழு மனதுடன் அதனை செய்வார். மாணவர்களுக்கு கல்வி கற்பதில் அதிக ஈடுபாட்டுடன் பல கலைகளுடன் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தருகிறார். இதனால் மாணவர்கள் எளிதாக கல்வியை கற்பதுடன், அதிக ஈடுபாட்டுடன் கல்வியை கற்கிறார்கள். இதுமட்டும் அல்லாது, இவர் கலைகள் மூலம் கல்வியை கற்றுக் கொடுப்பதினால் மாநில அளவில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்று அதிலும் வெற்றி பெறுகிறார்கள்" என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: துளசிமதி முருகேசன் முதல் வைஷாலி வரை.. ELITE திட்டத்தில் இணைந்த 6 சாதனையாளர்கள்.. யார் இவர்கள்? என்ன கிடைக்கும்?