சென்னை: சென்னையில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், மாநிலம் முழுவதும் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதனிடையே, சென்னை காவல் ஆணையர் உட்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதனையடுத்து, சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்ற அருண், ரவுடிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
மேலும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பதவி ஏற்றுள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் ரவுடிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாக கூறப்பட்டது. அந்த வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐஜிக்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு, அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.
அந்த வகையில், ரவுடிகளின் மீதான வழக்கை கிடப்பில் போடாமல் தலைமறைவாக உள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், அதை மீறியும் வழக்குகள் கிடப்பில் போடப்பட்டால் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகின.
அதேபோல், ரவுடிகளுடன் தொடர்பில் இருக்கும் காவல்துறையினரை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் முதல் டிஎஸ்பிக்கள் வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும் என சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார். லத்தி, துப்பாக்கிகளை எந்த நேரத்தில், எப்படி கையாள வேண்டும் என்ற பயிற்சி அளிக்க வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், ஒவ்வொரு சரகங்களாக காவல் துறையினருக்கு உயர் காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து வருகின்றனர். குறிப்பாக, ரவுடிகளின் தாக்குதலில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதானவர்களிடம் இருந்து 3 கார்கள் பறிமுதல்.. அதிமுகவில் இருந்து மலர்கொடி நீக்கம்!