சென்னை: நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அருகே ஓ.பன்னீர்செல்வம் இருக்கை இருந்தது.
இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி "எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கை ஒதுக்கப்பட வேண்டும்" எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று எடப்பாடி பழனிசாமிக்கு அருகில் உள்ள இருக்கையை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள ஆர்.பி உதயகுமாருக்கு ஒதுக்கீடு செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 207வது எண் இருக்கை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நேற்றைய தினம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் சட்டசபையில் பேசு பொருளான நிலையில், இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்குமாறு சபாநாயகரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி உள்ள செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவரது இருக்கையும் சட்டப்பேரையில் மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: மகளை அடித்ததால் ஆத்திரம்- மனைவியை கத்தியால் குத்திய கணவருக்கு 7 ஆண்டு சிறை -மகிளா நீதிமன்றம்!