திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திற்கு உட்பட்ட விஜயாபதியில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் 143 பேருக்கு 75 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகரிடம், அய்யா வைக்குண்டர் சனாதனத்தை ஆதரித்தவர் என ஆளுநர் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அவர், "1833ஆம் ஆண்டு அய்யா வைகுண்டர் அவதரித்தார்.
அந்த காலகட்டத்தில், அவர் பிறந்த சமூகத்தில் பிறந்தவர்கள் இந்து ஆலயம் அமைந்துள்ள தெருவில் செல்ல முடியாது. கோயிலுக்குள் நுழைய முடியாது. பெண்கள் மார்பில் துணி அணியக்கூடாது. ஆண்கள் தலைப்பாகை கட்டக் கூடாது என்ற நெருக்கடியான காலத்தில் அவர் பிறந்தார்.
அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் முடிசூடும் பெருமாள், அப்போது சனாதன தர்மம் உச்சத்தில் இருந்தது. திருவாங்கூர் மகாராஜா ஒரு சனாதனவாதி. அவர் அய்யா வைகுண்டர் இழிகுலத்தில் பிறந்தார் எனக் கூறி, முத்துக்குட்டி என அவரது பெயரை மாற்றினார். இந்த கொடுமைகளை செய்தது சனாதன ஆதிக்க சக்திகள்.
இதற்கு எதிராக அய்யா வைகுண்டர் கடவுள் அவதாரமாக வந்து, மக்கள் அனைவரும் சமம் எனச் சொல்லி, புது வழிமுறையை கொண்டு வந்தார். அதுதான் சமத்துவம், சமதர்மம், சாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்டு மனித இனம் ஒன்று என்ற உயர்ந்த குறிக்கோளைக் கொண்டு வந்தவர்.
அவருக்கு சனாதானவாதிகளால்தான் துன்பம் வந்தது. அதனை எதிர்த்துப் போராடி, சமதர்மத்தை நிலைநாட்டியவர். இப்படிப்பட்ட அய்யா வைகுண்டர் சனாதனவாதி என்று சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இதே போன்று மறைந்த கால்டுவெல், வட அயர்லாந்தில் பிறந்து, லண்டனில் படித்து இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவில் 18 ஆண்டுகாலம் படித்தார். 18 மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். அந்த காலகட்டத்தில் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் சமஸ்கிருத்தில் இருந்து தோன்றியது என ஒரு போலி தோற்றத்தை உருவாக்கி இருந்தார்கள்.
அதனை மாற்றி திராவிடத்திற்கும், சமஸ்கிருதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. திராவிட மொழி தனி மொழி. உலகில் தோன்றிய மூன்று மொழிகளில் தமிழ் மொழி முதலில் தோன்றியது என்பதை ஆய்வு செய்து, தமிழில் இருந்துதான் பிற மொழிகள் தோன்றின என்பதை நிரூபித்தவர் கால்டுவெல்.
இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்தான் எல்லோருக்குமான ஆட்சி நடத்துகிறார். 90 சதவீத இந்துக்களுக்கு எதிரானவர்கள்தான் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள். உதாரணமாக, மத்திய அரசு 10 சதவீத இட ஒதுக்கீடு உயர் வகுப்பினருக்கு கொடுத்துள்ளனர்.
மீதமுள்ள 90 சதவீத இந்துக்களுக்கு கொடுக்கப்படவில்லை. இதில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள், 10 சதவீத மக்களுக்கான ஆட்சி, சனாதனத்திற்கான ஆட்சி. இதில் இருந்து வந்தவர்தான் தமிழக ஆளுநர். அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என தெரிவித்தார்.
தொடர்ந்து இதுபோன்று ஆளுநர் பேசிவருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "கிராமத்தில் சொல்வதைப் போல் சொல்லுகிறதை கேட்கவேண்டும். இல்லை என்றால் சொந்தமாக தெரிய வேண்டும். இரண்டும் இல்லாமல் ஆளுநர் தவறுதலாக பேசுகிறார்" என சபாநாயகர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜி.யூ.போப், கால்டுவெல் படிக்காதவர்கள் - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!