மதுரை: மாற்றுத்திறனாளிகள் ரயில் பயண சலுகைக்கான அடையாள அட்டையை ஆன்லைன் மூலமாக,இருந்த இடத்திலிருந்தே பெறும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளி பயணிகள் சலுகை முறையில் பயணம் செய்வதற்கான அடையாள அட்டையை இனி ஆன்லைன் மூலமாக இருந்த இடத்திலிருந்தே பெறும் வகையில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை மாறறுத்திறனாளிகள் எளிதாக அணுக முடியும். பயண சலுகைக்கான அடையாள அட்டை பெறுவதற்கு மாற்று திறனாளிகள் தங்கள் நேரத்தை செலவழித்து இனி நேரில் வரத் தேவையில்லை என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாற்று திறனாளிகள் ரயிலில் பயணம் செய்ய 75 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கட்டண சலுகையை பெற கடந்த காலத்தில் அரசு மருத்துவரிடம் மருத்துவ சான்றிதழ் பெற்று அதனை பயணத்தின் போது காண்பித்து சலுகை பெற வேண்டிய நிலை இருந்தது. பின்னர் அடையாள அட்டையை பயன்படுத்தி பயண சலுகை பெறும் நடைமுறை இப்போது அமலில் உள்ளது. அதாவது அடையாள அட்டையைப் பெற கோட்ட ரயில்வே அலுவலகங்களுக்குச் சென்று உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்து, தேவையான பரிசீலனைக்கு பிறகு அடையாள அட்டை பெற வேண்டிய நிலை உள்ளது. .
இப்போது இதனையும் எளிமைப்படுத்தும் வகையில் ஆன்லைனிலேயே மாற்றுத் திறனாளிகள் பயண அட்டையைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திலிருந்தே அடையாள அட்டை பெறவும் புதிய இணையதள வசதியை இந்திய ரயில்வே. அறிமுகப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தென் மாவட்ட மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. என்ன தெரியுமா?
அதன்படி புதிய முறையில் அடையாள அட்டை பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தேவையான சான்றிதழ்களை https://divyangjanid.indianrail.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள வசதி மூலம் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். உரிய பரிசீலனைக்கு பிறகு அடையாள அட்டையும் இணையதளம் மூலமே வழங்கப்படும். ஆன்லைன் ஒப்புதல் அளித்த பின்னர் இணையதளத்தில் இருந்தே அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்லைனில் பெறும் அடையாள அட்டையை பயன்படுத்தி வழக்கம்போல ரயில்வே பயண சீட்டு பதிவு அலுவலகங்கள் அல்லது இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக இணையதளம் வாயிலாக பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அதேபோல, அடையாள அட்டையை பயன்படுத்தி பயணச்சீட்டு பதிவு அலுவலகங்கள் அல்லது யூடிஎஸ் செயலி வாயிலாக முன்பதிவில்லாத பயண சீட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த புதிய முறையின் மூலம் மாற்றுத்திறனாளி பயணிகள் தங்கள் உடலை வருத்திக் கொண்டு அலையத் தேவையில்லை. இணையதளத்திலேயே எளிதாக அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்