மதுரை: மதுரையில் இருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள காச்சிகுடா ரயில் நிலையத்திற்கு வாராந்திர அடிப்படையில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் இருந்து, பிற மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் இந்த இரயிலை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்யும் இந்த ரயில், காச்சிகுடாவில் இருந்து சனிக்கிழமையும், மதுரையில் இருந்து ஞாயிறுக்கிழமையும் புறப்படுகிறது.
காச்சிகுடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜனவரி மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி காச்சிக்குடாவில் இருந்து திங்கட்கிழமைகளில் இரவு 08.50 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்கிழமைகளில் இரவு 08.45 மணிக்கு மதுரை வந்து சேரும் காச்சிக்குடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 07191) பிப்ரவரி 5 முதல் மார்ச் 25 வரை இயக்கப்படும்.
மறு மார்க்கத்தில் மதுரையில் இருந்து புதன்கிழமைகளில் அதிகாலை 05.30 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் காலை 07.05 மணிக்கு காச்சிக்குடா சென்றடையும். மதுரை - காச்சிகுடா வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்-09172) பிப்ரவரி 7 முதல் மார்ச் 27 வரை இயக்கப்படும்.
இந்த ரயில்களில் 1 குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
இதையும் படிங்க: திருச்சியில் வாழை, கொய்யா பயிர்களை சேதப்படுத்திய குரங்குகள்.. நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு!